35 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு சிறப்பு நிலை காவல் ஆய்வாளர் பதவி உயர்வு அளிக்கப்படுமா?

35 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு சிறப்பு நிலை காவல் ஆய்வாளர் பதவி உயர்வு அளிக்கப்படுமா?
Updated on
1 min read

மதுரை: தமிழ்நாடு காவல்துறையில் 35 ஆண்டுகள் பணி நிறைவு செய்த காவலர்களுக்கு சிறப்பு நிலை காவல் ஆய்வாளர் பதவி உயர்வு அளிக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.

தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் அமர்த்தப்படும் காவலர்களுக்கு, குறிப்பிட்ட கால இடைவெளியில் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்படுவது வழக்கம். இதன்படி, இரண்டாம் நிலை காவலராக பணியில் சேரும் காவலர் 15 ஆண்டுகளில் தலைமைக் காவலராக பதவி உயர்வு பெறுவார். அதன்பின், அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 25-வது ஆண்டில் சிறப்பு எஸ்ஐ பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.

எஸ்.ஐ.க்கு இணையான சீருடை, அந்தஸ்து கிடைத்தாலும், பெரும்பாலான காவல் நிலையங்களில் சிறப்பு எஸ்.ஐ.களை விசாரணை அதிகாரியாக செயல் பட வாய்ப்பு அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அவர்களுக்கு தலைமைக் காவலருக்கான ( ஏட்டு ) பணியையே ஒதுக்குவதாகவும் கூறப்படுகிறது. சிறப்பு எஸ்ஐகள் 6 மாதம் துறை ரீதியாக காவல்துறை பயிற்சிப் பள்ளியில் முறையான பயிற்சி பெற்றால் மட்டுமே நேரடி எஸ்.ஐ.க்கான அந்தஸ்து கிடைக்கிறது. அதன் பின்னரே ஆய்வாளர் பதவி உயர்வுக்கான பட்டியலுக்குத் தயாராகின்றனர்.

இது போன்ற சூழலில் 6 மாத காலப் பயிற்சிக்கு செல்வதற்கும் பணி மூப்பு முன்னுரிமையை பின்பற்றுவதால் பலருக்கு ஓய்வுநாளுக்கு 6 மாதம் முன்பே துறை ரீதியான பயிற்சிக்கு செல்லும் வாய்ப்புக் கிட்டுகிறது. இதனால் சிலர் பயிற்சியைத் தவிர்த்து, சிறப்பு எஸ்.ஐ.களாகவே பணி ஓய்வு பெறுகின்றனர். எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் 35 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு நிலை காவல் ஆய்வாளர் பதவி உயர்வுடன், ஆய்வாளருக்கு இணையான சம்பள உயர்வும் அளிக்கலாம் என கடந்த தேர்தலின் போது, திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியது. இதை அரசு நிறை வேற்ற வேண்டும் என காவல்துறையினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறியதாவது: தற்போது 35 ஆண்டுகள் பணி நிறைவு செய்யும் பலர் எஸ்ஐகளாகவே ஓய்வு பெறுகின்றனர். புதுச்சேரியில் 15 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு சிறப்பு நிலை தலைமைக் காவலராகவும், 25 ஆண்டுகள் முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை உதவி எஸ்.ஐ.யாகவும், 35 ஆண்டுகள் முடித்தோருக்கு சிறப்பு நிலை எஸ்.ஐ.யாகவும் பதவி உயர்வுடன் அதற்கான ஊதிய உயர்வும் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையிலும் 35 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை காவல் ஆய்வாளர் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in