

சென்னை: மூன்றாவது அணி அமைப்பது குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடந்த நாடார் மகாஜன சங்க மாநாட்டில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: ''கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு சட்டமன்றத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதை பார்க்கும்போது, வேண்டுமென்றே கர்நாடகா, தமிழகத்திடம் மோதுகிறது. தமிழக அரசு ஏமாந்து விடக்கூடாது. அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் அளிக்க வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பில் தமிழ்நாடு அரசு தூங்குகிறதா அல்லது தூங்குவதுபோல் நடிக்கிறதா என தெரியவில்லை. தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் போதைப்பொருள் பயன்பாடு 100 மடங்கு அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் என்ன கிடைக்கிறதோ அத்தனை போதைப்பொருட்களும் தமிழ்நாட்டில் கிடைக்கின்றன. இவற்றை தடுக்க, முதல்வர் கவனம் செலுத்தவேண்டும். மருந்தகங்களில் போதை மாத்திரைகள் விற்பனையை தடை செய்ய வேண்டும்.
சமீபத்தில் தான் சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இருப்பினும், முதலீட்டாளர்களை ஈர்க்க, முதல்வர் வெளிநாடு செல்வது என்பது ஒன்றும் புரியவில்லை. 4ஜி சிட்டி என்ற திட்டத்தை மதுரையில் கொண்டு வரவேண்டும். சென்னையில் 65% தொழிற்சாலைகள் இருக்கும் நிலையில், தென் மாவட்டங்களில் 12 சதவீத தொழிற்சாலைகளே உள்ளன. அயோத்தி ராமர் கோவிலை வைத்து பாஜக அரசியல் செய்கிறதா என்பது தெரியாது. அது ஒரு கோயில் விழாவாகவே நான் பார்க்கிறேன்.
அதிமுக, திமுகவுக்கு மாற்றாக பாமக மூன்றாவது அணி அமைப்பது குறித்து தற்போது எவுதும் சொல்ல முடியாது. மக்களவை தேர்தல் குறித்து எங்களது நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம். நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தால் அவரது கூட்டணியில் இணைவீர்களா என்ற கேள்விக்கெல்லாம் பதிலளிக்க முடியாது. இன்னும் கல்யாணமே ஆகவில்லை அதற்குள் குழந்தைக்கு பெயர் வைக்க சொல்கிறீர்கள்.'' இவ்வாறு அவர் கூறினார். பாமக மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா, வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.