

புதுச்சேரி: தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் விரோதமான, மக்களுக்கும், தேசத்துக்கும் எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக மத்திய பாஜக மோடி அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்களின் சார்பில் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகன பேரணி இன்று நடைபெற்றது.
இப்பேரணிக்கு ஏஐடியூசி பொதுச்செயலாளர் சேது செல்வம், சிஐடியு செயலாளர் சீனுவாசன், ஐஎன்டியுசி பொதுச்செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஏஐசிசிடியு பொதுச்செயலாளர் புருஷோத்தமன், எல்எல்எப் செயலாளர் செந்தில், என்டிஎல்எப் செயலாளர் மகேந்திரன், ஏஐயுடியுசி செயலாளர் சிவக்குமார், எம்எல்எப் செயலாளர் வேதா வேணுகோபால், விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் கீதநாதன், தமிழ்ச்செல்வன், சங்கர், ரவி, விஜயபாலன், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனங்களுடன் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள ஜூலை 30 தியாகிகள் சிலை அருகில் தொடங்கிய பேரணி மறைமலை அடிகள் சாலை, நெல்லித்தோப்பு, இந்திரா காந்தி சதுக்கம், ராஜிவ் காந்தி சிலை வழியாக காமராஜர் சாலை, அண்ணா சாலை வழியாக சென்று சுதேசி மில் அருகில் நிறைவடைந்தது.
இதில் வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதப்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். புதுச்சேரி அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும். பிரிபெய்டு மின் மிட்டர் திட்டத்தை கைவிட வேண்டும்.
ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும். மூடிக் கிடக்கும் அரசு சார்பு நிறுவனங்களை திறந்து நடத்த வேண்டும். சிறு குறு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க்கூடாது. ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட வேண்டும். கிராமப்புற வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை குறைந்தபட்ச நாள் ஊதியம் ரூ.600 உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.