Published : 26 Jan 2024 07:52 AM
Last Updated : 26 Jan 2024 07:52 AM

கிளாம்பாக்கத்தை தாண்டி நகருக்குள் வராத ஆம்னி பேருந்துகள்; ஓட்டுநர்களுடன் பயணிகள் கடும் வாக்குவாதம்: ஆயிரக்கணக்கில் செலவு என குற்றச்சாட்டு

சென்னை: சென்னையில் நேற்று காலை முதல் கிளாம்பாக்கத்தைத் தாண்டி பெரும்பாலான பேருந்துகள் பயணிகளுடன் நகருக்குள் வரவில்லை. இதனால் ஓட்டுநர்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை வண்டலூரை அடுத்து புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகள் புறப்பட வேண்டும் என்ற உத்தரவுக்கு பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் முதலே கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவியது. ஏாாளமான போலீஸார் குவிக்கப்பட்டு, பயணிகளும், பேருந்துகளும் நிலையத்துக்குள் செல்வது முற்றிலுமாக தடுக்கப்பட்டது.

இதையடுத்து, பயணிகளின்றி இயக்கப்பட்ட தென்மாவட்ட பேருந்துகளையும், பயணிகளுடன் வேலூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகளை மட்டுமே நிலையத்தில் இருந்து வெளியே வருவதற்கு போலீஸார் அனுமதித்தனர். சில பேருந்துகள் கிளாம்பாக்கத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதால் நள்ளிரவு வரை ஊருக்குச் செல்வதற்காக வந்த பயணிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகினர்.

இந்நிலையில், நேற்று காலை முதலே பெரும்பாலான பேருந்துகள் கிளாம்பாக்கம் நிலையத்துக்குள் சென்று பயணிகளை இறக்கிவிட்டன. இதனால் ஓட்டுநர்களுடன் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல ஆட்டோவில் குறைந்தபட்சம் ரூ.500 வசூலிக்கப்படுவதால் உடைமைகளையும், குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு எப்படி செல்வது என வழி தெரியாமல் திகைத்து நின்றனர். சில பேருந்துகள் நெடுஞ்சாலைகளிலேயே பயணிகளை இறக்கிவிட்டதால் அவதிக்குள்ளாகினர். நகருக்குள் பேருந்துகள் செல்லாது என இறுதி நேரம் வரை கூறவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர். இவ்வாறு இறக்கிவிடப்பட்ட பயணிகள், மாநகர பேருந்து, ஆட்டோ, டாக்சி போன்றவற்றின் மூலம் தங்களது இருப்பிடத்தை நோக்கிச் சென்றனர்.

பேருந்து இயக்கம் தொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அ.அன்பழகன் கூறும்போது, “கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் நிறுத்தும் இடங்கள் நிரம்பிய உடன், நிலையத்துக்குள் வர பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனாலேயே வேறு வழியின்றி நெடுஞ்சாலைகளில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை இறக்கினோம்.நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக அரசு செயல்படுகிறது. எனவே, விரைவில் நீதிமன்றத்தை நாட இருக்கிறோம். எங்களுக்கான வசதிகளை செய்து கொடுத்தால் கிளாம்பாக்கத்துக்குச் செல்ல தயாராக இருக்கிறோம்” என்றார்.

இந்நிலையில், நேற்று மாலை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கிளாம்பாக்கத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கிளாம்பாக்கத்தில் இருந்து 90 சதவீதம் ஆம்னி பேருந்துகளை இயக்கிய உரிமையாளர்களுக்கு நன்றி. நேற்று முன்தினம் இரவு 440 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், 330 பேருந்துகள் நேற்று காலை வந்தடைந்தன. இவற்றில் வந்த 20 ஆயிரம் பேரில் சுமார் 9,800 பேர், இணைப்பு பேருந்துகள் மூலம் கட்டணமில்லாமல் மாநகரபேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x