Published : 25 Jan 2024 06:15 AM
Last Updated : 25 Jan 2024 06:15 AM

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக வழக்கு: பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன், மருமகள் 2 வாரங்களில் ஆஜராக உத்தரவு

சென்னை: பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக பதியப்பட்ட வழக்கில் பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் ஆகியோர் இருவாரங்களில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்டோ மதிவாணனும், அவரது மனைவி மெர்லினாவும் தங்களது வீட்டில் பணிபுரிந்த 18 வயது பணிப்பெண்ணை அடித்து துன்புறுத்தியதாக வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இருவர் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், எங்களது வீட்டில் பணிபுரிந்த இளம்பெண் அளித்துள்ள புகாரில் கூறிஉள்ளபடி எந்த தாக்குதல் சம்பவமும் நடைபெறவில்லை.

சொந்த மகளைப் பார்ப்பது போலவே கவனித்துக் கொண்டோம். கடந்த டிச.26-ம் தேதி அவருடைய பிறந்த நாளை எங்களது வீட்டில்கொண்டாடினோம். அதற்கான புகைப்படங்களில் அவர் மகிழ்ச்சியுடன் இருந்தது தெரியவரும். ஆனால் அடுத்த 15 நாட்களில் எங்களுக்கு எதிராக புகார் அளிக்கும் அளவுக்கு எவ்வாறு மாறினார் என தெரியவில்லை.

அவருடைய காதலுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அதன் காரணமாகவே எங்கள் மீது புகார் அளித்துள்ளார், இந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடையும் நாளிலேயே, தங்களது ஜாமீன் மனுவை பரிசீலிக்கும்படி அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும், என கோரியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிஎன். ஆனந்த் வெங்கடேஷ், மனுதாரர்கள் இருவரும் இந்த உத்தரவு நகல் கிடைக்கப்பெற்ற இருவாரங்களில் கீழமை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அப்போது இவர்களின் ஜாமீன் மனுவை சட்டத்துக்குட்பட்டு பரிசீலித்து, இரு தரப்புக்கும் நோட்டீஸ் பிறப்பித்து சட்ட ரீதியாக முடிவெடுக்க வேண்டும் என சென்னை அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x