Published : 25 Jan 2024 09:18 AM
Last Updated : 25 Jan 2024 09:18 AM

கீழக்கரை அரங்கு ஜல்லிக்கட்டு: முதலிடம் பிடித்து சொகுசு ஜீப் வென்று அபிசித்தர் அசத்தல்!

மதுரை: அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் தவறவிட்ட முதல் இடத்தை கீழக்கரை ஜல்லிக் கட்டு போட்டியில் நேற்று 10 காளைகளை அடக்கி முதலிடம் பெற்று அசத்தினார். அவரது விடா முயற்சியை ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், பார்வையாளர் களும் கைதட்டி வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம் அலங்கா நல்லூர் அருகே கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கில் நேற்று நடந்த போட்டியில் 8 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தி கிராமத்தை சேர்ந்த மாடுபிடி வீரர் அபி சித்தர் முதலிடம் பிடித்தார். இவருக்கு முதல்வர் சார்பில் `மகேந்திரா தார்' சொகுசு ஜீப் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

இவர், சமீபத்தில் நடந்து முடிந்த அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 17 காளைகளை அடக்கி முதல் பரிசை மயிரிழையில் தவற விட்டிருந்தார். முதலிடம் பிடித்த கார்த்திக் என்பவர் 18 காளைகளை அடக்கியிருந்தார். ஆனால், விழாக் குழுவினர் கார்த்திக்குக்கு ஆதரவாக ஒருதலைப் பட்சமாக நடந்து கொண்டதாக கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன் என அதிருப்தியில் இருந்தார். மேலும், விழாக் குழு சார்பில் அலங்கா நல்லூரில் வழங்கப்பட்ட பரிசைப் பெறாமல் புறக்கணித்தார்.

இச்சம்பவம் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நேற்று கீழக்கரை ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு முதல் பரிசைப் பெற்று, தான் சிறந்த மாடுபிடி வீரர் என்பதை நிரூபித்துள்ளார். அபிசித்தர், ஏற்கெனவே 2023-ம் ஆண்டு அலங்கா நல்லூரில் அதிக காளைகளை அடக்கி முதல் பரிசாக கார் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x