

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே மேலும் ஒரு உயர்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் காவேரிப்பட்டணமும் ஒன்று. இங்கு சிறு, குறு மற்றும் குடிசைத் தொழில்கள் அதிகம் நடைபெற்று வருகின்றன. இதனால், காவேரிப்பட்டணத்தை, ‘குட்டி ஜப்பான், குட்டி சிவகாசி’ என அழைப்பதுண்டு. இங்குத் தீப்பெட்டி தொழிற்சாலைகள், நிப்பட், பால்கோவா தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. அதேபோல மாங்கூழ் தொழிற்சாலைகளும் அதிகமாக உள்ளன.
கிருஷ்ணகிரியிலிருந்து காவேரிப்பட்டணம் வரும் சாலையின் நுழைவு வாயில் பகுதியில் தென்பெண்ணை ஆறு பாய்ந்தோடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்து நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து வரும் வாகனங்கள் மற்றும் காவேரிப்பட்டணத்திலிருந்து இப்பகுதிக்குச் செல்லும் வாகனங்களும் ஆற்றுப் பாலத்தைக் கடந்தே செல்ல வேண்டும்.
இதனால், இப்பாலத்தில் 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து அதிகம் இருக்கும். இந்நிலையில், இப்பாலம் கட்டப்பட்டு 72 ஆண்டுகளைக் கடந்துள்ளது. மேலும், நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்கும் வகையில், ஆற்றின் குறுக்கே உயர் மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும் எனப் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக காவேரிப் பட்டணத்தைச் சேர்ந்த பார்த்திபன் கூறியதாவது: கடந்த 1952-ம் ஆண்டுக்கு முன்னர் வரை காவேரிப் பட்டணம் தென்பெண்ணை ஆற்றில் தரைப் பாலம் இருந்தது. அந்த பாலத்தைக் கடந்து மக்கள் சென்று வந்தனர். மழைக் காலங்களில் அப்பாலத்தைக் கடக்க மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். இதனால், கடந்த 1952-ம் ஆண்டு வாகனப் போக்கு வரத்துக்காக தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.
தற்போது, இப்பாலம் பழுதடைந்து உள்ளது. மேலும், பாலத்தில் ஆங்காங்கே சில இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பக்கவாட்டு சுவர்களில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்துள்ளன. குறிப்பாக, இப்பாலம் இரு வழிப் பாதையாக இருப்பதால் பாலத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. தற்போதைய மக்கள் தொகை மற்றும் வாகன எண்ணிக்கையால் ஏற்படும் நெரிசலை தவிர்க்க மற்றொரு உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும்.
இதனால், வாகனங்கள் நகருக்குள் வர ஒரு பாலத்தையும், நகரிலிருந்து கிருஷ்ணகிரி மற்றும் அதன் வழியாகச் செல்லும் வாகனங்கள் மற்றொரு பாலத்தையும் பயன்படுத்துவதன் மூலம் வாகன நெரிசல் குறையும். எனவே, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேலும், ஒரு உயர்மட்ட பாலம் கட்ட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.