

தமிழக முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை சட்டப்பேரவைக்கு செல்லும் வழியில் சாலையோரம் நின்றிருந்த வழக்கறிஞர்களை பார்த்து காரை நிறுத்தி அவர்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுச் சென்றார்.
போர் நினைவிடம் அருகே முதல்வர் ஜெயலலிதா காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது அங்கு திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கூட்டமாக சாலையோரம் நின்றிருந்தனர்.
இதை பார்த்த முதல்வர் ஜெயலலிதா, காரை நிறுத்தி வழக்கறிஞர்களை சந்தித்தார்.
வழக்கறிஞர்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கவும், வழக்கறிஞர்கள் சேம்பர் அமைக்கவும் நடப்பு நிதியாண்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதுகுறித்த மனுவையும் முதல்வரிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர், வழக்கறிஞர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.