

சென்னை: “கரோனா பேரிடரில் பணியாற்றி, உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு, அரசு வேலைக்கான உத்தரவை வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று தமிழக முதல்வர் வழங்க வேண்டும்” என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவின் தலைவர் எஸ்.பெருமாள் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுகாதாரத் துறையில் தமிழகம் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழ்கிறது. மேலும் உயிர் காக்கும் துறையில் தேசிய விருதுகள் என்றாலே, தமிழகம் என சொல்லப்படும் வகையில், டெல்லியில் முத்திரை பதித்து வருகிறது. இருப்பினும் தமிழகத்துக்கு பெருமை சேர்த்து வரும் அரசு மருத்துவர்களுக்கு, உரிய ஊதியம் மறுக்கப்படுவது தான் மிகுந்த வருத்தமளிக்கிறது. அதுவும் கிட்டத்தட்ட சுதந்திர போராட்டத்துக்கு இணையாக, பல ஆண்டுகளாக, காந்திய வழியில் போராடி வருகிறோம்.
2019-ம் ஆண்டு மருத்துவர்கள் போராட்டத்தின் போது, அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த நம் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். மேலும் அடுத்து திமுக ஆட்சி அமையும் போது, கோரிக்கை நிறைவேறும் என உறுதியளித்தார். இருப்பினும் ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைய இருக்கும் நிலையில், ஊதியக் கோரிக்கை நிறைவேறவில்லை என்ற வலியும், வருத்தமும் 19 ஆயிரம் அரசு மருத்துவர்களிடமும் அதிகமாகவே இருக்கிறது.
அதுவும் கோரிக்கைக்காக மருத்துவர் ஒருவர் உயிரையே கொடுத்த பிறகும், அரசு மனம் இரங்கவில்லை. என்ன பாவம் செய்தோம் நாங்கள்? டாக்டர் ஆனது தவறா? தமிழகத்தில் அரசுப் பணியில் சேர்ந்தது தவறா? இல்லை, தினந்தோறும் ஏராளமான உயிர்களை காப்பாற்றி வருவது தான் தவறா? தொடர்ந்து இவ்வாறு அரசு மருத்துவர்களை மன வருத்தத்துடன் பணி செய்ய வைப்பது சுகாதாரத் துறைக்கும் நல்லதல்ல, தமிழகத்துக்கும் நல்லதல்ல என்பது முதல்வருக்கு நன்றாகவே தெரியும்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தமிழகத்தில் சுகாதாரத் துறை பல மடங்கு வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான பங்களிப்பை தரும் அரசு மருத்துவர்களுக்கு, நாட்டிலேயே குறைவான ஊதியம் தருவது நியாயமா? திமுக ஆட்சி அமைந்த பிறகு மூன்று சுதந்திர தினங்கள் கொண்டாடப்பட்டுள்ளது. 3-வது முறையாக குடியரசு தினம் வர இருக்கிறது. இந்த தினங்களில் எத்தனையோ தியாகிகளையும், சாதனையாளர்களையும் முதல்வர் கவுரவப்படுத்தி வருகிறார்கள்.
ஆனால், கரோனா பேரிடரில் பணியாற்றி, உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் குடும்பம் வேதனைப்படுவதை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படவில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது. நிச்சயம் இதை முதல்வர் விரும்ப மாட்டார்கள் என நம்புகிறோம். கரோனா பேரிடரை அவ்வளவு எளிதாக யாரும் மறக்க முடியாது. அதுவும் கரோனா முதல் அலையின்போது பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டன. அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை. பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
அந்தக் கடினமான தருணத்தில் அரசு மருத்துவமனைகள் தான் மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தன. தங்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு என தெரிந்தும், ஒவ்வொரு மருத்துவரும் அர்ப்பணிப்போடு பணி செய்தோம். ஆயிரக்கணக்கான அரசு மருத்துவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதோடு, 11 அரசு மருத்துவர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு திமுக அரசு எதையுமே செய்யவில்லை என்பதுதான் வருத்தமான உண்மை.
குறிப்பாக, உயிரிழந்த மருத்துவர்களில் ஒருவர்தான் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் காது, மூக்கு தொண்டை நிபுணராக பணியாற்றி வந்த டாக்டர் விவேகானந்தன். தனக்கு நிவாரணமும், அரசு வேலையும் தரப்பட, விவேகானந்தனின் மனைவி தன் குழந்தைகளுடன் அமைச்சரை 3 தடவை நேரில் சந்தித்து வேண்டினார். இருப்பினும் அமைச்சர் மனம் இரங்கவில்லை. கணவரை இழந்து தவிக்கும் தனக்கு அரசு வேலை தரப்பட வேண்டி, கண்ணீருடன் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் வைத்தார். இருந்த போதும் இன்னமும் முதல்வரின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை.
முதல்வர் மறைந்த மருத்துவர் விவேகானந்தனின் மனைவி மற்றும் குழந்தைகளை வரவழைத்து, ஒரே ஒருமுறை நேரில் சந்தித்தால், நிச்சயம் அவர்களின் வலியும், வேதனையும் என்ன என்பது தெரிய வரும். அந்தப் பிஞ்சு குழந்தைகள் கேட்கும் கேள்விகள் கல் நெஞ்சத்தையும் கரைய வைப்பதாகவே உள்ளது. ஆம். என்னுடன் பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்களுக்கு எல்லாம் அப்பா இருக்கும்போது, எங்களுக்கு மட்டும் ஏன் அப்பா இல்லை? எங்க அப்பா மட்டும் டாக்டராக இல்லைன்னா இப்ப எங்களோடு இருந்திருப்பாங்களே? கரோனா சமயத்தில் எங்க அப்பா 6 மாதம் லீவு போட்டிருந்தால் இப்ப எங்க அப்பா உயிரோடு இருந்திருப்பாங்களே? இந்தக் கேள்விகளுக்கு நம்மால் பதில் சொல்ல முடியவில்லை.
இதற்கிடையே, இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், டாக்டர் விவேகானந்தன் மனைவிக்கு, கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் இன்று வரை அரசு கருணை காட்டவில்லை. மக்களின் உயிரை காப்பாற்ற போராடி உயிரிழந்த மருத்துவரின் குடும்பம் தொடர்ந்து கண்ணீர் சிந்துவதை முதல்வர் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார் என நம்புகிறோம்.
எனவே, வருகின்ற ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலைக்கான ஆணையை, தமிழக முதல்வர் தன் கரங்களால் வழங்கிட வேண்டுகிறோம். மேலும் அன்றைய தினம் அரசு மருத்துவர்களுக்கான கலைஞர் அரசாணை 354 நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட தமிழக முதல்வரை வேண்டுகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.