

சென்னையில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!: பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக 3 நாள் பயணமாக தமிழகம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, “தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தைக் காண ஆர்வமாக இருக்கிறேன். சென்னைக்கு வந்தது சொந்த ஊருக்குக்கு வந்ததுபோல இருக்கிறது. விளையாட்டுத் துறையில் சாம்பியன்களை உருவாக்கும் பூமியாக தமிழகம் திகழ்கிறது. விளையாட்டில் சாதனை படைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற விரும்புகிறேன்” என்றார்.
முன்னதாக, விமான நிலையத்தில் பிரதமரை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர்கள் வரவேற்றனர். பாஜக தலைவர்கள் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் உள்பட 27 பேர் பிரதமரை வரவேற்கும் வரவேற்பு குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
பிரதமர் மோடி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம், ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தை வந்தடைந்து, பின்னர், அங்கிருந்து காரில் நேரு உள்விளையாட்டு அரங்கம் வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டன.
“மணிப்பூர் வீரர்களுக்கு சகோதர உணர்வோடு தமிழகத்தில் பயிற்சி”: “மணிப்பூரில் நிலவும் பிரச்சினைகளால், அங்குள்ள விளையாட்டு வீரர்கள் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியாமல் போக, அவர்களை சகோதர உணர்வோடு தமிழகத்துக்கு வரவேற்று, பயிற்சி கொடுத்தது, நம்முடைய திராவிட மாடல் அரசு. அவர்களில் சிலரை, இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்” என்று சென்னையில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
“விளையாட்டுத் துறையிலும் தமிழகம் முக்கிய இடம்”: “இந்தியாவில் கல்வி, மருத்துவம் என்றால் தமிழகத்தையே முதன்மை மாநிலமாகச் சொல்வார்கள். இன்றைக்கு விளையாட்டுத் துறையிலும் இந்தியாவிலேயே தமிழகம் மிக முக்கியமான மாநிலம் என்று கூறும் வகையில் உயர்ந்திருக்கிறது" என்று சென்னையில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
பாக்., ஈரான் அமைதி காக்க ஐ.நா, அமெரிக்கா அழைப்பு: எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் காரணம் கூறி பாகிஸ்தான், ஈரான் நாடுகள் பரஸ்பர வான்வழித் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளும் அமைதி காக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் அழைப்பு விடுத்துள்ளன.
அதிமுகவில் இணைந்தார் காயத்ரி ரகுராம்: கடந்த ஆண்டு பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
திமுக எம்எல்ஏ மகன் வீட்டு பணிப் பெண் புகாரின் பேரில் வழக்குப் பதிவு: திருவான்மியூரில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்தபோது, அவ்வீட்டின் உரிமையாளரர்களான கணவன், மனைவி தன்னை அசிங்கமாக பேசியும், அடித்தும் காயப்படுத்தியதாகவும் கூறி 18 வயது பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே, பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதி அளித்த பேட்டி ஒன்றில், “என் மகனுக்கு ஏழு வருடங்களுக்கு முன்னர் திருமணமாகிவிட்டது. அவர் அவரது குடும்பத்துடன் திருவான்மியூரில் வசித்து வருகிறார். நான் வேறு பகுதியில் வசிக்கிறேன். அவர்கள் எப்போதாவது இங்கு வருவார்கள். நானும் எப்போதாவது அங்கு செல்வேன். அங்கு நடந்தது என்னவென்ற முழு விவரம்கூட எனக்குத் தெரியாது. நடந்த சம்பவத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் இதில் ஏதும் தலையிடவில்லை. இந்த விவகாரத்தில் எனக்கும் என் மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்.
‘பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளுக்கு அவகாசம் கிடையாது’: பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் அனைவரும் சிறைத் துறை அதிகாரிகள் முன்பு சரணடைய கால அவகாசம் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. மேலும், குற்றவாளிகள் 11 பேரும் நீதிமன்றத்தின் அசல் காலக்கெடுவான ஜனவரி 21-ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
அயோத்தி ராமர் சிலையின் சிறப்புகள்: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு சடங்குகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கின. இதன் தொடர்ச்சியாக, குழந்தை ராமர் சிலையை பீடத்தில் வைக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. ஐந்து வயது சிறுவனாக ராமர் சிலை வடிக்கப்பட்டுள்ளது. மைசூருவைச் சேர்ந்த அருண் யோகராஜ் என்ற சிற்பி வடித்த சிலை இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிராண பிரதிஷ்டையை ஒட்டி நவக்கிரக ஹோமங்களும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள ராமர் சிலையானது, தென்னிந்தியாவின் பழமையான பாறையில் இருந்து செதுக்கப்பட்டது என்றும், இந்தக் கல் 300 கோடி ஆண்டுகள் பழமையானது என்றும் ஓய்வுபெற்ற புவியியல் பேராசிரியர் சி.ஸ்ரீகந்தப்பா தெரிவித்துள்ளார்.
மைசூர் மாவட்டத்தில் உள்ள குக்கேகவுடனாபுராவில் செயல்படும் குவாரியில் இருந்து எடுக்கப்பட்ட பாறையில் இருந்து ராமர் சிலை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பாறைகள், இந்தியாவின் பிற பகுதிகளிலும் காணப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
இந்தியா - மாலத்தீவு இடையே பேச்சுவார்த்தை: மாலத்தீவுடனான உறவு விரிசலுக்கு மத்தியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சர்கள் இருவரும் இருநாட்டு உறவுகள் பற்றி வெளிப்படையான உரையாடல் நடத்தினர். இரு நாடுகளுக்கிடையேயான தற்போதைய சூழ்நிலையில் இந்த சந்திப்பு அதிக கவனம் பெறுகிறது.
பல்கலை. துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது சேலம் கருப்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.