

மதுரை: மதுரையைச் சேர்ந்த ஆனந்தி ஷா என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
மேற்குவங்கத்தைச் சேர்ந்தவிக்ரம் என்பவர், எனக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்துக் கொண்டார். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், இதுவரை விக்ரமை போலீஸார் கைது செய்யவில்லை. வழக்கு பதிவு செய்து ஓராண்டுக்கு மேலாகியும், விசாரணை முடியவில்லை.
விக்ரம் மேற்குவங்கத்தில் இருப்பது தெரிந்தும், அவரைக் கைது செய்ய போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நில அபகரிப்பு வழக்கு விசாரணையை முடித்து, நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி சதிகுமார் சுகுமார குரூப் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில், மனுதாரர் நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறப்படும் விக்ரம்மேற்குவங்கத்தில் தலைமறைவாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி உத்தரவில் கூறியிருப்பதாவது: போலீஸார் தாக்கல் செய்துள்ள அறிக்கைதிருப்திகரமாக இல்லை. தலைமறைவு குற்றவாளிகள் தொடர்பாகநாளிதழ்களில் ஏன் விளம்பரம் செய்வதில்லை? கேரள போலீஸாரின் தலைமறைவு குற்றவாளிகள் தொடர்பான விளம்பரங்களை முன்னணி நாளிதழ்களில் தினமும் பார்க்க முடிகிறது. இதை தமிழக போலீஸார் ஏன் செய்வதில்லை. தமிழக போலீஸாரின் இந்த நடவடிக்கை, குற்றவாளிகளைப் பாதுகாப்பதுபோல உள்ளது.
இது தொடர்பாக தென் மண்டல ஐ.ஜி., மதுரை மாநகர் காவல் ஆணையர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும். இதற்காக இருவரையும் நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராகச் சேர்க்கிறது. விசாரணை பிப். 2-க்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.