திமுகவின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ எதிர்ப்பு முதல் பங்குச்சந்தை வீழ்ச்சி வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.17, 2024

திமுகவின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ எதிர்ப்பு முதல் பங்குச்சந்தை வீழ்ச்சி வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.17, 2024
Updated on
3 min read

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - முதல் பரிசு வென்றார் கார்த்திக்!

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் புதன்கிழமை காலை 7 மணிக்குத் துவங்கியது. களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை போட்டிப் போட்டிக்கொண்டு மாடுபிடி வீரர்கள் அடக்கி பரிசுகளை வென்றனர். மாலை 6.15 மணி வரை நடந்த இந்தப் போட்டியில், 18 காளைகளை அடக்கி கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் முதலிடம் பிடித்து காரை பரிசாக வென்றார்.

அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டில், கடந்த ஆண்டு முதலிடம் பிடித்த பூவந்தியைச் சேர்ந்த அபிசித்தர் 17 காளைகளை அடக்கி இரண்டாம் இடம் பிடித்தார். 12 காளைகளை அடக்கிய குன்னத்தூரைச் சேர்ந்த திவாகரன் மூன்றாம் இடம் பிடித்தார்.

இந்த ஆண்டு முதல் பரிசு வென்றுள்ள கார்த்திக், 2022-ம் ஆண்டிலும் முதல் பரிசு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 810 காளைகள் அவிழக்கப்பட்ட இந்தப் போட்டியில் 83 பேர் காயமடைந்தனர். சிறந்த காளைக்கான முதல் பரிசை மேலூரைச் சேர்ந்த குணா என்பவருக்கு சொந்தமான காளை வென்றது.

‘ஸ்டார்ட் அப் தரவரிசையில் தமிழகம் முதலிடம்’ - ஸ்டாலின் பெருமிதம்: “ஸ்டார்ட் அப் தரவரிசைப் பட்டியலில், கடந்த ஆட்சிக் காலத்தில் 2018-இல் கடைசித் தரநிலையில் இருந்த தமிழகம், நமது திராவிட மாடல் ஆட்சியில் 2022-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 7,600 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. அவற்றுள் 2022-ஆம் ஆண்டில் மட்டும் 2,250 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இடத்தைத் தக்கவைக்கவும், மேலும் உயரங்களைத் தொட உழைக்கவும் வேண்டுகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிறாவயல் மஞ்சுவிரட்டு: சிறுவன் உள்பட 2 பார்வையாளர்கள் உயிரிழப்பு: உலகப் புகழ் பெற்ற சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிறாவயல் கிராமத்தில் நடக்கும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் மாடு முட்டியதில் சிறுவன் உள்பட 2 பார்வையாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜல்லிக்கட்டு பாரம்பரியம்: நிர்மலா சீதாராமன் கருத்துக்கு எதிர்ப்பு: “ஜல்லிக்கட்டு, ஏறு தழுவுதல் எல்லாம் தமிழர்களின் பாரம்பரியமிக்க கலாச்சாரம். இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திரித்து புராணம், இதிகாசத்துக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி திசை திருப்பும் வேலையை செய்கிறார்” என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்... எதிர்ப்பது ஏன்? - திமுக விளக்கம்: “அதிகார வரம்பற்ற விசாரணை நடத்தும் உயர்நிலைக் குழு, அதிகாரப் பசி கொண்ட மத்திய பாஜக அரசுக்கு துணை போகாமல் தனது விசாரணையை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நிலைக் குழுவுக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது.

அந்தக் கடிதத்தில், அரசியல் சட்டத்துக்கும், அச்சட்டம் தந்த கூட்டாட்சி தத்துவத்துக்கும் எதிராக மத்திய - மாநில உறவை மட்டுமின்றி, ஒன்றியத்திற்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை கைவிட வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக, நாடாளுமன்ற மற்றும் மாநில சட்ட சபைகளோடு, நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் இணைத்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விதமாக ஆய்வு வரம்புகளை வெளியிட்டுள்ள செயல் என்பது, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், குடியரசு தலைவர் முறையிலான ஆட்சியை நோக்கியும் செல்வதாகவும் அமையும் என்று திமுக சுட்டிக்காட்டியுள்ளது.

“ஊழல்தான் காங்கிரஸ் - இடதுசாரிகளின் ஒற்றுமை!”: “கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணிக்கும், எதிரணியான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையிலான வரலாற்று ஒற்றுமை என்பது ஊழலும் முறைகேடும் மட்டுமே” என்று அம்மாநிலத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உருவாவது எப்படி? - ப.சிதம்பரம் விளக்கம்: “வரும் மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்கும்” என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கை குழு தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் "தேர்தல் அறிக்கைக்காக பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெற இருக்கிறோம். எனவே, அதிக எண்ணிக்கையில் மக்களின் கருத்துகளைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளோம். இன்னும் சில வாரங்கள்தான் உள்ளன. அதற்குள் மக்களின் கருத்துகளை நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் பெற திட்டமிட்டுள்ளோம்" என்று அவர் விவரித்துள்ளார்.

கனடாவுக்கு செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை சரிவு: இந்தியாவில் இருந்து கனடாவுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களில் கடந்த ஆண்டில் 86 சதவீதம் சரிவு ஏற்பட்டதாக அந்நாட்டின் குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “இந்தியா - கனடா இடையேயான உறவில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இங்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது. இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவு எவ்வாறு மேம்படும் என்பது குறித்து என்னால் சொல்ல முடியாது. அதற்கான வெளிச்சம் தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 1,600+ புள்ளிகள் சரிவு: வங்கிப் பங்குகளின் சரிவு மற்றும் ஆசிய பங்குச்சந்தைகளின் பலவீனமான போக்குகள் காரணமாக இந்தியப் பங்குச்சந்தையில் புதன்கிழமை கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. சென்செக்ஸ் 1,600 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிவைச் சந்தித்தது. பல்வேறு காரணங்களால் சரிவு தூண்டப்பட்டாலும் மிகப் பெரிய தனியார் கடன் வழங்குநரான ஹெச்டிஎஃப்சி வங்கி பங்கின் வீழ்ச்சிதான் பங்குச்சந்தை சரிவின் முக்கியக் காரணியாக இருந்தது.

தொடர்ந்து 2-வது ஆண்டாக சீன மக்கள் தொகை சரிவு: சீனாவின் மக்கள்தொகை 2023-ஆம் ஆண்டில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில், 142 புள்ளி 57 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 140 புள்ளி 9 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்குவது குறிப்பிடத்தக்கது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in