

நாமக்கல்: சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மோகனூர் சிப்காட் அலுவலகம் முன்பு விவசாயிகள் கருப்பு சட்டை அணிந்து பொங்கல் வைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
மோகனூர் தாலுகாவுக்கு உட்பட்ட வளையப்பட்டி, புதுப்பட்டி, அரூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில், 700 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வளையப்பட்டி சிப்காட் அலுவலகம் முன்பு கருப்பு சட்டை அணிந்து பொங்கல் வைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும், ‘சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி’ முழக்கங்களை எழுப்பினர். தமிழ்நாடு விவசாய முன்னேற்ற கழகத் தலைவர் பால சுப்ரமணியம், தமிழ்நாடு கொங்கு வேளாளர் பேரவை மாநில தலைவர் தேவராஜன், கொமதேக தெற்கு மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், விவசாய பிரிவு மாவட்ட அமைப்பாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.