

திருவள்ளுவரை மீண்டும் விவாதமாக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி: காவி உடையில் இருக்கும் திருவள்ளுவரின் உருவப்படத்தைப் பகிர்ந்து, அவரை சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி என்று குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் கருத்தைப் பகிர்ந்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி அவர் வெளியிட்ட சமூகவலைதளப் பதிவில், “திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த, மதிப்புக்குரிய கவிஞரும், சிறந்த தத்துவஞானியும், பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காலத்தால் அழிக்க இயலாத அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் வழிகாட்டியாகவும், உத்வேகத்தின் ஆதாரமாகவும் இருக்கிறது. இந்தப் புனித நாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது” - முதல்வர் ஸ்டாலின்: ஆளுநரின் பதிவுக்கு எதிர்வினையாற்றியுள்ள முதல்வர் ஸ்டாலின், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர். 133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே திருக்குறள் மற்றும் திருவள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை என்றும் வள்ளுவரின் நிறம் மனிதநேயம்தான். வேண்டுமென்றால் வள்ளுவருக்கு கருப்பு நிறம் போடலாம் என்று திமுக எம்.பி. கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.
பாலமேடு ஜல்லிக்கட்டு - முதல் பரிசு வென்ற பிரபாகரன் கோரிக்கை: புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. 1000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் பங்கேற்ற இப்போட்டியில், 14 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. சிறந்த காளையாக புதுக்கோட்டை மாவட்டம் ராயவயல் பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவரின் `சின்னக்கருப்பு' என்ற காளையின் உரிமையாளருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 49 பேர் காயம் அடைந்தனர்.
சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டு கார் பரிசு பெற்ற பிரபாகரன் கூறுகையில், “ நான் ஒன்பதாம் வகுப்பு படித்துள்ளேன். அரசு வேலை வழங்கினால் நன்றாக இருக்கும். இதுபோன்ற ஆடம்பரமான கார் பரிசு எங்களுக்கு தேவையில்லை. இந்த கோரிக்கையை தொடர்ந்து சில ஆண்டாகவே வலியுறுத்தி வருகிறோம். உயிரை பணயம் வைத்து விளையாடுகிறோம். கார் பரிசுக்கு பதிலாக அரசு வேலை கிடைத்தால் எங்களுக்கு வாழ்வாதாரத்துக்கு உதவியாக இருக்கும். மற்ற விளையாட்டுகளில் வெற்றி பெற்றால் அரசு வேலை தேடி சென்று கொடுக்கப்படுகிறது. இதுவும் விளையாட்டுதான். அதைவிட நம்முடைய பாரம்பிரய விளையாட்டு. அதனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களுடைய கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்” என்று கோரிக்கை வித்தார்.
முன்னதாக, மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டி திங்கள்கிழமை விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. 17 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த அவனியாபுரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் என்பவருக்கு 10 லட்சம் மதிப்பிலான கார் மற்றும் கறவை பசு பரிசாக வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் 2 காவலர்கள் உள்பட 51 பேர் காயமடைந்தனர்.
சென்னையில் 17,000 போலீஸார் பாதுகாப்பு @ காணும் பொங்கல்: காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கூட்டம் அலைமோதும் என்பதால் புதன்கிழமை சென்னையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். சென்னை முழுவதும் 15,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் 1,500 ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மெரினா கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் (Drone Camera) மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்புகளில் 4 ட்ரோன் கேமராக்கள் என மொத்தம் 8 ட்ரோன் கேமராக்கள் தீவிரமாக கண்காணிப்படும். அதிக திறன் கொண்ட டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு, கடலோர மணற்பகுதிகளில் காவல்துறையின் எச்சரிக்கை வாசகங்கள் ஒலிபரப்பப்படும் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
சந்திரபாபு நாயுடு வழக்கு 3 பேர் அமர்வுக்கு மாற்றம்: ஊழல் வழக்கில் தன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதனால், இந்த வழக்கின் விசாரணையை 3 நீதீபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரானார் ஒய்.எஸ்.ஷர்மிளா: ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டிவை, அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்துள்ளார். ஆந்திர அரசியல் களத்தில் முதல்வர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டிக்கு போட்டியாக அவரது சகோதரியான ஒய்.எஸ்.ஷர்மிளாவை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது கவனிக்கத்தக்கது.
முன்னதாக, ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியின் தலைவராக இருந்த ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி, கடந்த 4-ம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து, தனது கட்சியையும் காங்கிரஸோடு இணைத்துவிட்டதாக அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக, ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கிடுகு ருத்ர ராஜு தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த விரும்புகிறோம்”: இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின் மூன்றாம் நாளில், மணிப்பூரின் கரோங் நகரில் பேசிய காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, “நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்பதையும், மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த விரும்புகிறோம் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
பின்னர், நாகலாந்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ராகுல்காந்தி, “ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் இணைந்து ஜனவரி 22 நிகழ்வை முற்றிலும் மோடி நிகழ்வாக, அரசியல் நிகழ்வாக, ஆர்எஸ்எஸ் நிகழ்வாக மாற்றியுள்ளன. இது ஆர்எஸ்எஸ் - பாஜக நிகழ்வாகக் கொண்டாடப்படுவதால்தான் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த விழாவை புறக்கணிப்பதாகத் தெரிவித்தார். இந்தியப் பிரதமரை சுற்றி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஓர் அரசியல் நிகழ்வில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் விழாவாக அடையாளப்படுத்தப்படும் ஒரு நிகழ்வில் எங்களால் கலந்து கொள்ள முடியாது” என்றார்.
மொசாட் உளவு அலுவலகம் மீது ஈரான் தாக்குதல்: ஈராக்கில் உள்ள இஸ்ரேலின் புகழ்பெற்ற உளவு அமைப்பான மொசாட் உளவு அமைப்பின் தலைமை அலுவலகத்தை குறிவைத்து ஈரான் தாக்குதலை நடத்தியுள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம், இந்த உளவு அலுவலகம் குர்திஸ்தானின் அர்பில் பகுதியில் அமெரிக்க தூதரகக் கட்டிடத்தின் அருகே உள்ளது. ஈரான் நடத்திய திடீர் தாக்குதலில் ஈராக், சிரியா அதிர்ச்சியடைந்துள்ளன.
குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்வில் ட்ரம்ப் வெற்றி :2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய அயோவா மாகாணத்தில் நடந்த தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்று தடம் பதித்துள்ளார்.
இதனிடையே அயோவா மாகாண தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி அறிவித்தார்.
மதுரா மசூதியில் கள ஆய்வு: உச்ச நீதின்றம் தடை: உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஷாயி ஈத்கா மசூதியில் ஆய்வு செய்ய ஆணையரை நியமிக்கும் அலகாபாத் உயர் நீதிமன்ற அனுமதி உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்காலக் தடைவிதித்துள்ளது. ஆய்வு செய்ய உள்ளூர் ஆணையரை நியமிக்க கோரும் மனு தெளிவற்றது என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், ஆய்வுக்கு தடைவிதித்தும், இதுதொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்தலாம் என்றும் கூறியுள்ளது.