Published : 16 Jan 2024 01:47 PM
Last Updated : 16 Jan 2024 01:47 PM
சென்னை: திருக்குறள் மற்றும் திருவள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை என்றும் வள்ளுவரின் நிறம் மனிதநேயம்தான். வேண்டுமென்றால் வள்ளுவருக்கு கருப்பு நிறம் போடலாம் என ஆளுநரின் சர்ச்சைப் பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி. கனிமொழி சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மும்மொழிக் கொள்கைக்கான தேவை என்னவென்று கூறினால், அதை நாம் புரிந்து கொள்ள முடியும். தற்போது மும்மொழிக் கொள்கைக்கான தேவை எதுவுமே கிடையாது. நம்முடைய பாரம்பரியம், அடையாளம் தாய் மொழி தமிழ். மற்ற மொழியினரோடு பேசுவதற்கு ஆங்கில மொழி இருக்கிறது. இதனால் ஆங்கிலம் படிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. மற்ற பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்களுடன் பேசுவதற்கு ஆங்கிலம் என்பது இணைப்பு மொழியாக உலகெங்கிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தாண்டி மற்றொரு மொழி படிப்பது என்பது, அது அவரவருடைய விருப்பம். ஆனால் மும்மொழிக் கொள்கை என்பது அவசியம், என்பதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது.
திருக்குறள் மற்றும் திருவள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை. திருவள்ளுவரை ஒரு துறவி என யாருமே கூறியது கிடையாது. அவருக்கு திருமணம் ஆகி ஒரு மனைவி இருந்ததாகவும் கருத்து இருக்கிறது. இல்லறம் குறித்து அவரைப் போல கவித்துவமாக எழுதியிருப்பவர்கள் யாருமே இருக்க முடியாது. திருக்குறளை படித்து புரிந்து கொள்ளக்கூடிய நாம் அவரை துறவியாக பார்த்ததே கிடையாது. திருக்குறளில் எந்த ஒரு மத அடையாளமும் கிடையாது. சனாதனம் உள்ளிட்ட வேறு எந்த மதத்தையுமே நாம் அவர் மீது திணிக்க முடியாது.
இதை அடிப்படையிலேயே புரிந்து கொள்ள வேண்டும். மதத்தை கடந்து மனிதத்தை பேசுவது தான் திருக்குறள். மனிதநேயத்துக்கு ஒரு நிறம் இருந்தால் அதுதான் திருவள்ளுவரின் நிறம். எனக்குத் தெரிந்து அடுத்த மனிதநேயத்தின் அடையாளம் பெரியார். வேண்டுமென்றால் வள்ளுவருக்கு கருப்பு நிறம் போடலாம்” என்றார்.
முன்னதாக, ஆளுநர் ரவி, “திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த, மதிப்புக்குரிய கவிஞரும், சிறந்த தத்துவஞானியும், பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலத்தால் அழிக்க இயலாத அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் வழிகாட்டியாகவும், உத்வேகத்தின் ஆதாரமாகவும் இருக்கிறது. இந்தப் புனித நாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT