Published : 14 Jan 2024 04:55 PM
Last Updated : 14 Jan 2024 04:55 PM

போகி பண்டிகை காரணமாக சென்னையில் மோசமான அளவில் காற்று மாசு - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

சென்னை: ஜன.13 காலை 8 மணி முதல் ஜன.14 காலை 8 மணி வரை சுற்றுச்சூழல் காற்று தரத்தினை அளவீடு செய்ததில், சென்னையில் குறைந்தபட்சமாக அண்ணாநகரில் 131 ஆகவும் (மிதமான அளவு) அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 270 ஆகவும் (மோசமான அளவு) இருந்தது என கண்டறியப்பட்டது என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,"போகி பண்டிகையின் போது, நகரவாசிகள் ரப்பர் டயர்கள், டியூப்கள், பாய், கம்பிகள் போன்ற பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதிக ஈரப்பதம் மற்றும் குறைந்த வெப்பநிலை முன்னிலையில் குடியிருப்பாளர்களால் கொளுத்தப்படும் நெருப்பு, புகை மூட்டத்தை ஏற்படுத்துகிறது, இது பல்வேறு சுகாதார கேடுகளை ஏற்படுத்துகிறது. அதோடு, வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் மற்றும் இடையூறை ஏற்படுகிறது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஜன.11 அன்று அனைத்து அச்சு, மின்னணு மற்றும் பிற சமூக ஊடகங்கள் மூலமாகவும், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைமையகங்களிலும் பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்கள் எரிப்பதால் ஏற்படும் தீமைகளை தவிர்க்குமாறு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் சுற்றுப்புற காற்றின் தரத்தை கண்காணிக்கும் பொருட்டு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் போகிக்கு முந்தைய (ஜன.10 முதல் ஜன.11 வரை) மற்றும் போகி நாளில் (ஜன.13 முதல் ஜன.14 வரை) 24 மணிநேரம் காற்றின் தர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

0 முதல் 50 வரையிலான காற்றுத் தர குறியீடு நன்று. இதனால் குறைந்த அளவிலான உடல்நல பாதிப்புகள் ஏற்படும். 51 முதல் 100 வரையிலான காற்றுத் தர குறியீடு திருப்திகரமான அளவு. இதனால், எளிதில் நோய்வாய்ப்படக்கூடிய நபர்களுக்கு மூச்சுக் கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு. 101 முதல் 200 வரையிலான காற்றுத் தர குறியீடு மிதமான மாசு. இதனால், நுரையீரல் நோய் (ஆஸ்துமா), இருதய நோய் கொண்டவர்களுக்கும், மேலும் சிறார் மற்றும் முதியோர்களுக்கும் மூச்சு விடுவதில் கோளாறு ஏற்படுத்தும்.

201 முதல் 300 வரையிலான காற்றுத் தர குறியீடு மோசமான அளவு. இதனால், மாசுக்காற்றினை தொடர்ச்சியாக நுகர்வோருக்கு மூச்சு கோளாறும், ஏற்கனவே இருதய நோய் உடையோருக்கு அதிக கோளாறுகளையும் ஏற்படுத்தும். 301 முதல் 400 வரையிலான காற்றுத் தர குறியீடு மிக மோசமான அளவு. இதனால், மாசுக்காற்றினை தொடர்ச்சியாக நுகர்வோருக்கு மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும், மேலும் இருதய, நுரையீரல் நோய் உடையவர்களுக்கு மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்தும். 401 முதல் 500 வரையிலான காற்றுத் தர குறியீடு அபாயகரமான அளவு. இதனால், நல்ல உடல்நலத்துடன் இருக்கும் நபர்களுக்கு மூச்சு சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்புண்டு, மேலும் நுரையீரல் / இருதய நோய் உடையோர்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும், என இந்தியவில் காற்றுத்தர குறியீடு (Air Quality Index) வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆய்வகத்தின் அறிக்கையின்படி, பின்வரும் கண்டுபிடிப்புகள் காணப்பட்டன. இந்த ஆய்வின்படி ஜன.13 காலை 8 மணி முதல் ஜன.14 காலை 8 மணி வரை சுற்றுச்சூழல் காற்று தரத்தினை அளவீடு செய்ததில், காற்றில் கலந்துள்ள கந்தக-டை-ஆக்ஸைடு, மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு ஆகிய வாயுக்களின் அளவு அனைத்து 15 மண்டலங்களிலும் அனுமதிக்கப்பட்ட (24 மணி நேர சராசரி) தர அளவான 80 மைக்ரோகிராம்/கனமீட்டருக்கு உட்பட்டு இருந்தது.

காற்றில் கலந்துள்ள (PM2.5) நுண்துகள்களின் அளவு குறைந்தபட்சமாக 52 மைக்ரோகிராம்/கனமீட்டர் முதல் அதிகபட்சமாக 111 மைக்ரோகிராம்/கனமீட்டர் வரை இருந்தது. நிர்ணயிக்கப்பட்ட PM2.5 24 மணி நேர சராசரி தர அளவு 60 மைக்ரோகிராம்/கனமீட்டர். மேலும், காற்றில் கலந்துள்ள (PM10) நுண்துகள்களின் அளவு குறைந்தபட்சமாக 118 மைக்ரோகிராம்/கனமீட்டர் முதல் 289 மைக்ரோகிராம்/கனமீட்டர் வரை இருந்தது. நிர்ணயிக்கப்பட்ட PM10 24 மணி நேர சராசரி தர அளவு 100 மைக்ரோகிராம்/கனமீட்டர்.

காற்று தர குறியீடு (Air Quality Index) பொருத்தமட்டில் குறைந்தபட்சமாக அண்ணாநகரில் 131 ஆகவும் (மிதமான அளவு) அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 270 ஆகவும் (மோசமான அளவு) இருந்தது என கண்டறியப்பட்டது.போகி நாளில் (ஜன.14), சென்னை விமான நிலையத்தில் விமானம் வருகை மற்றும் புறப்படுவதில் தடங்கல் காணப்பட்டது, இதற்குக் காரணம் அதிக ஈரப்பதம் குறைந்த காற்றின் வேகம் குறைவான பார்வைக்கு வழிவகுக்கிறது. ஆனால் போகி நாளின் முந்தைய ஆண்டு மதிப்பை ஒப்பிடும் போது காற்றின் தர குறியீட்டு மதிப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பிற அரசுத் துறைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் காரணமாக, போகி தினத்தன்று இரவு ரோந்துப் பணியின் போது, பொதுமக்களிடையே ரப்பர் டயர்கள், டியூப்கள், பிளாஸ்டிக் போன்ற கழிவுப் பொருட்களை எரிப்பது வெகுவாகக் குறைந்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனைத்து அரசுத் துறைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்பு நலச் சங்கங்கள், பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மற்றும் குறிப்பாக பொதுமக்களுக்கு புகை குறையாத போகி பண்டிகையை கொண்டாட ஒத்துழைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x