

மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அவிழ்க்க ஏதுவாக பக்கவாட்டில் தள்ளும் கதவு ( sliding door ) முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நாளை ( ஜன.15 ) அவனியாபுரத்திலும், ஜன.16-ல் பாலமேடு, ஜன.17-ல் அலங்கா நல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடக்கிறது. அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் 90 சதவீதம் முடிந்துள்ளன. இங்கு மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் இணைந்து ஏற்பாடுகளை செய்கிறது. அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் வி.மதுபாலன் ஆகியோர் மேற்பார்வையில் பணிகள் நடக்கின்றன.
உயிரிழப்பை தவிர்க்கும் வகையில், வழக்கத்துக்கு மாறாக காலரி உள்ளிட்டவை கூடுதல் பாதுகாப்புடன் அமைக்கப்படுகிறது. அதிக மக்கள் ஜல்லிக்கட்டை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காளைகள், வீரர்கள் பதிவு மிக அதிகமாக உள்ளன. முடிந்தளவு அதிக காளைகளை களம் இறக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 2,400 காளைகள், 1,318 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். கடந்த காலங்களில் 800 காளைகள் வரை அவிழ்க்கப்பட்டுள்ளன.
எந்தெந்த காரணத்துக்காக காளைகளை அவிழ்ப்பதில் தாமதம் ஏற்பட்டது என ஆராய்ந்து அதற்கேற்ப உரிய மாற்றங்கள் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு காளையாக வாடிவாசலுக்கு பாதுகாப்பாக அனுப்ப கதவு பயன்படுத்தப் படும். இந்த கதவை மூடி திறக்க கூடுதல் நேரமாகும். மேலும் காளைகளை முன்னும், பின்னும் நகர்த்த வேண்டியிருக்கும். காளைகளும் சில அடி இடைவெளியில் நிறுத்த வேண்டிருக்கும். இதை தவிர்க்க பக்கவாட்டில் இழுத்து திறந்து மூடும் வகையில் புதிய கதவு வாடிவாசலின் உட்புறம் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறுகையில், ‘இந்த கதவை பயன்படுத்துவது எளிது. காளைகளும் தள்ளிக் கொண்டு வெளியேற முடியாது. மேலும் ஒவ்வொரு காளையை வாடிவாசலுக்கு அனுப்பும் போதும் சில வினாடிகள் மீதமாகும். இதன் மூலம் கூடுதல் காளைகளை அவிழ்க்க வாய்ப்பு கிடைக்கும் என்றனர்.