

திருப்பத்தூர்: ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த இளம்பெண்ணை, தனியார் மருத்துவமனைக்கு செல்லுமாறு பணியில் இருந்த அரசு மருத்துவர் கூறிய சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய அளவில் சிறந்த மருத்துவ கட்டமைப்புகளை கொண்டுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பல சிக்கலான உடல் நல பிரச்சினைகளை கூட அரசு மருத்துவர்கள் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து சாமானிய மக்களின் உயிரை காப்பாற்றி பெரும் சாதனை படைத்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த அரசு மருத்துவர் ஒருவரின் நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.
ஆம்பூர் அடுத்த புதுமனை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் வயிற்று வலிக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவர் ஒரு மணி நேரம் காத்திருந்தும், எந்த மருத்துவரும் அவரை பரிசோதனைக்கு அழைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இளம்பெண்ணின் 8 வயது மகள், மருத்துவரை தேடிச்சென்று தனது தாயாருக்கு கடும் வயிற்று வலி உள்ளது, எனவே, அவரை பரிசோதனை செய்ய வேண்டும் என மருத்துவர் கார்த்திகேயன் என்பவரிடம் கூறியுள்ளார்.
அப்போது, பணியில் இருந்த மருத்துவர் கார்த்திகேயன் சிகிச்சை அளிக்க வர மறுப்பு தெரிவித்ததோடு, “அவசரமாக இருந்தால் தனியார் மருத்துவமனைக்கு போக வேண்டியது தானே? இங்கு வந்து ஏன்? எங்க கழுத்தை அறுக்குறீங்க?” என காட்டமாக பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, செவிலியர் ஒருவர் அந்த இளம்பெண்ணுக்கு ஊசி செலுத்தியுள்ளார். இருப்பினும், இளம்பெண்ணின் வயிற்று வலி குறையாததால் மருத்துவரிடம் மேல் சிகிச்சை அளிக்குமாறு இளம்பெண் கூறியுள்ளார்.
அதற்கு மருத்துவர் கார்த்திகேயன் “ஆம்புலன்ஸை கூப்பிடுறேன். வேணும்னா.. வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கோ இல்லை, தனியார் மருத்துவமனைக்கு போ” என பதில் அளித்துள்ளார். இதைக் கேட்டு அதிருப்தியடைந்த இளம்பெண் “ஏன் இப்படி சொல்கிறீர்கள்?” என கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
அப்போது, அங்கிருந்த பிற நோயாளிகள் இளம் பெண்ணுக்கு ஆதரவாக மருத்துவரை பார்த்து சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதைக்கேட்ட அரசு மருத்துவர், “நீ எங்க வேணும்னாலும் போய் சொல்லு. நான் யாருக்கும் பயப்படமாட்டேன். என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது’’ என ஒருமையில் பேசி அந்த இளம்பெண்ணை மிரட்டினார். இதை அங்கிருந்த நோயாளி உடன் வந்த ஒருவர் தனது கைபேசியில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த காட்சி நேற்று வைரலானது.
ஆம்பூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் குறித்து ஏற்கெனவே ஏராளமான புகார்கள் எழுந்து வரும் நிலையில், பணியில் உள்ள அரசு மருத்துவர் ஒருவர், நோயாளிகளை ஒருமையில் பேசி, தனியார் மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறிய இந்த விவகாரம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மருத்துவத் துறை நிர்வாகம் முழுமையாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்கப்பட வேண்டும். உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பல்வேறு ஆய்வுகளை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இங்கு தினசரி 2 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
அனைவருக்கும் தரமான சிகிச்சை ஆம்பூர் அரசு மரத்துவமனையில் அளிக்கப்படுவதாக கூறியிருந்த நிலையில், அரசு மருத்துவர் ஒருவர் சிகிச்சைக்காக வந்த இளம் பெண்ணிடம் அநாகரீகமாக பேசிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மருத்துவத் துறை அதிகாரி களை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘இது குறித்த தகவல் தற்போது தான் வந்துள்ளது. விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் உண்மை நிலை தெரியவரும்’’ என்றனர்.