

மதுரை: கொட்டாம்பட்டி ஊராட்சியில் ரூ.19.46 லட்சம் முறைகேடு தொடர்பாக பிடிஓக்கள் உள்ளிட்ட 6 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகிலுள்ளது கொட்டாம் பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சில இடங்களில் ஆழ்குழாய்கள் (போர்வெல்ஸ் ) அமைக்கும் திட்டத்துக்கென கடந்த 3 ஆண்டுக்கு முன்பு ரூ. 19,46, 623 நிதியை அரசு ஒதுக்கியது. இந்த நிதி ஒதுக்கீட்டில் சில முறைகேடு நடந்ததாக அரசுத் துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார்கள் வந்தன.
இது தொடர்பாக மதுரை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்யசீலன் தலைமையில் ஆய்வாளர் குமரகுரு உள்ளிட்ட காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இவ்விசாரணையில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், கொட்டாம்பட்டி ஊராட்சியின் முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் ( பிடிஓ), தர்மராஜன், மேலூரைச் சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பாலச்சந்திரன் ( ஊராட்சி), மதுரை சூரியா நகரைச் சேர்ந்த உதவி நிர்வாக பொறியாளர் நீலமேகம், விசுவநாதபுரம் உதவி பொறியாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.