

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்: 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்துவரும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை வரும் ஜனவரி 19-ம் தேதி வரை நிறுத்திவைப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வேலைநிறுத்தத்துக்கு எதிரான வழக்கின்போது, “தமிழகத்தில் பொங்கல் பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்படவுள்ளது. ஏற்கெனவே அரசும் 19-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. எனவே, பொங்கல் பண்டிகை முடியும் வரை இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை ஏன் தள்ளிவைக்கக் கூடாது?” என்று தொழிற்சங்கங்களுக்கு தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அப்போது தொழிற்சங்கங்கள் தரப்பில், தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு பணிக்கு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. வரும் ஜன.19-ம் தேதி வரை தங்களது போராட்டத்தை நிறுத்திவைப்பதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு, போக்குவரத்து தொழிலாளர்களை பணிக்குத் திரும்ப அனுமதியளித்த நீதிபதிகள், பணிக்குத் திரும்பும் பணியாளர்களை பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டார்.
பொங்கல் பரிசு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்: பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கிவைத்தார்.
முரசொலி நில விவகாரத்தில் புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவு: முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரில், புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணையை நடத்த தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பளித்து, விசாரணை நடத்தி, உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணைக்கு தடை கோரி தாக்கல் செய்யபட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
முரசொலி நில விவகாரம் - அண்ணாமலை கருத்து: "முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பட்டியல் சமூக மக்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலம் என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது. எனவே, திமுக இனியும் விசாரணையைத் தள்ளிப் போட முயற்சிக்காமல், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பட்டியல் சமூக மக்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுக்கும் பாஜகவின் சட்டப் போராட்டம் தொடரும்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமனை நியமிக்க பரிந்துரை: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமனை நியமிக்குமாறு ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
‘துடிப்பான குஜராத்’ மாநாடு: - ரூ.2 லட்சம் கோடி முதலீடு அறிவித்த அதானி: குஜராத் மாநிலம் காந்தி நகரில் ‘துடிப்பான குஜராத்’ 10-வது உச்சி மாநாடு புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பேசிய முகேஷ் அம்பானி, “இந்த உச்சி மாநாடு பிரதமர் நரேந்திர மோடிக்கான மரியாதை செலுத்தும் நிகழ்வு. பிரதமர் மோடி பேசும்போது, உலகமே கேட்கிறது” என்றார். மேலும், “2036 ஒலிம்பிக்கை இந்தியா நடத்தும். குஜராத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெரிய முதலீடுகளை மேற்கொள்ளும்” என்றும் முகேஷ் அம்பானி கூறினார். கவுதம் அதானி பேசுகையில், “அடுத்த ஐந்து ஆண்டுகளில், அதானி குழுமம் குஜராத்தில் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்யும்” என்று அறிவித்தார்.
“அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக்குவதே இலக்கு”: “நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. நாடு தனது 100-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது அது வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பதே நமது இலக்கு. இதைக் கருத்தில் கொண்டே அடுத்த 25 ஆண்டுகளை அமிர்த காலம் என நாம் குறிப்பிடுகிறோம்.” என்று ‘துடிப்பான குஜராத்’ சர்வதேச உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ராமர் கோயில் திறப்பு விழாவில் சோனியா, கார்கே பங்கேற்கவில்லை: ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவால் நடத்தப்படும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ராமரை வழிபடுகிறார்கள். மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் அயோத்தியில் கோயில் என்ற அரசியல் திட்டத்தை நீண்ட காலமாக உருவாக்கி வருகின்றன. தேர்தல் ஆதாயத்துக்காகவே முழுமையடையாத கோயிலை திறந்து வைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி சம்பவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: ஐகோர்ட் அதிருப்தி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தனது அதிருப்தியையும் பதிவு செய்துள்ளது.
பொங்கல் பண்டிகை - சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: பொங்கல் பண்டிகையை ஒட்டி தாம்பரம் - தூத்துக்குடி - தாம்பரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலும், தாம்பரம் - நெல்லை - தாம்பரம் இடையே முன்பதிவு சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.