Published : 10 Jan 2024 02:39 PM
Last Updated : 10 Jan 2024 02:39 PM

“பாஜகவின் சட்டப் போராட்டம் தொடரும்” - ஐகோர்ட் தீர்ப்புக்கு அண்ணாமலை வரவேற்பு @ முரசொலி நில விவகாரம்

சென்னை: "முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பட்டியல் சமூக மக்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலம் என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது. எனவே, திமுக இனியும் விசாரணையைத் தள்ளிப் போட முயற்சிக்காமல், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பட்டியல் சமூக மக்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுக்கும் பாஜகவின் சட்டப் போராட்டம் தொடரும்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடம், பட்டியல் சமூக மக்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலம் என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது. பல தளங்களில் கேள்வி எழுப்பியும், இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க வேண்டிய திமுகவோ, இதற்குப் பதில் கூறுவதைத் தவிர்த்து வருவது பொதுமக்களிடையே பலத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.

இது குறித்து தேசிய பட்டியலின ஆணையம் விசாரிக்கக் கோரி, கடந்த 2019-ஆம் ஆண்டு, தமிழக பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் முதல் புகார்தாரராகவும், பாஜகவின் மாநில பட்டியல் அணித் தலைவர் தடா பெரியசாமி இரண்டாம் புகார்தாரராகவும் தொடர்ந்த வழக்கில், பட்டியலின ஆணையம் விசாரிக்கத் தடை கோரி திமுக தொடர்ந்த மனு, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு, புதியதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணையைத் தொடங்க வேண்டும் என்ற தீர்ப்பு வந்துள்ளது.

திமுக இனியும் விசாரணையைத் தள்ளிப் போட முயற்சிக்காமல், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பட்டியல் சமூக மக்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுக்கும் பாஜகவின் சட்டப்போராட்டம் தொடரும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரில் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணையை நடத்த தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | முழுமையாக வாசிக்க < முரசொலி நில விவகாரம்: புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x