

சென்னை: "இதுவரை அரசு தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு வரவில்லை" என்று போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த விவகாரத்தில் சிஐடியு தொழிற்சங்க தலைவர் செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தர வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை, டிடிஎஸ்எப், எச்எம்எஸ் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்தம் தொடங்கின. நேற்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு பணிமனைகளில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரம் அரசு சார்பில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
இன்றும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் நடந்துவருகிறது. இதனிடையே, சிஐடியூ தொழிற்சங்க தலைவர் செளந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசுகையில், "இதுவரை அரசு தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த முறையான அழைப்பு வரவில்லை. ஊடகங்கள் மூலம் மட்டுமே பேசத் தயார் என அமைச்சர் சொல்லி வருகிறார். பேச்சுவார்த்தை அரசு தயார், நாங்கள் தயாரில்லை என்பதை பொய் தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்த அமைச்சர் அவ்வாறு ஊடகங்கள் மூலமாக சொல்கிறார். எங்களை பேச்சுவார்த்தைக்கு முறையாக அழைத்தால் நாங்கள் வரத் தயார். ஆனால், இதுவரை அரசு தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு வரவில்லை.
போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் இன்று மாநிலம் முழுவதும் பேருந்து நிலையங்களில் மறியல் நடத்தப்பட்டு வருகிறது. முறையாக பயிற்சி பெறாதவர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வண்டியை இயக்கிக் காட்டினால் போதும் என்று ஒரே பேருந்து மூன்று, நான்கு வழித்தடங்களில் இயக்கி மக்களை ஏமாற்றி வருகிறது அரசு. இதுவெல்லாம் மக்களை ஏமாற்றுகிற ஏற்பாடு. எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டதாகவும் பொய் சொல்லப்படுகிறது.
நிதிச்சுமை என்பதை காரணமாக சொல்ல முடியாது. நாங்கள் முன்வைத்த எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. எந்தவித முன்னேற்றமும் இல்லை. பழைய ஓய்வூதியம் உள்பட எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. அவற்றை வேகப்படுத்த வேண்டும் என்பதே நாங்கள் சொல்லிவருவது. பொங்கலுக்கு பிறகு பேசிக்கொள்ளலாம் எனச் சொல்வதை ஏற்க முடியாது. மக்களை திசை திருப்பும் வகையில் அமைச்சர் பேசி வருகிறார். பேருந்துகள் இயக்கப்பட்டதாக கூறுவதில் உண்மை இல்லை. அனைத்து பேருந்துநிலையங்களிலும் கூட்டம் கூட்டமாக பயணிகள் காத்திருக்கின்றனர்." இவ்வாறு தெரிவித்துள்ளார்.