Published : 10 Jan 2024 05:34 AM
Last Updated : 10 Jan 2024 05:34 AM

கூட்டணி பற்றி கவலைப்படாமல் வெற்றிக்கு வியூகம் அமைத்து அதிமுகவினர் உழைக்க வேண்டும்: மாவட்ட செயலாளர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்

சென்னை: சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வியூகம் அமைத்து, கூட்டணி பற்றி கவலைப்படாமல் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தினார்.

அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமை வகித்தார். பின்னர் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன், இணை பொதுச் செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் சீனிவாசன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜு, கே.டி.தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை மாவட்ட செயலாளர்கள் டி.ஜி.வெங்கடேஷ், தி.நகர் சத்யா, கே.பி.கந்தன், ஆர்.எல்.ராஜேஷ் உட்பட தமிழகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 72 மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பழனிசாமி பேசியதாக அதிமுக தரப்பில் கூறப்படுவதாவது: கூட்டணி பற்றி கவலைப்படாமல் வெற்றிக்காக கடினமாக உழைக்க வேண்டும். பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதிமுக வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்கு வியூகம் அமைத்து செயல்பட வேண்டியது அவசியம். அதற்காக மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்கு உட்பட்ட மக்களவை தொகுதியில் சிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளை கொண்டு பட்டியலை தயார் செய்து தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அதேபோல தேர்தல் பணிகளை அனைத்து நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து, கருத்து வேறுபாடுகளை களைந்து, கூட்டணியில் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் சுமூகமாக செயல்பட வேண்டும். மாற்றுக் கட்சியில் உள்ளவர்களை அதிமுகவில் இணைக்க கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும். இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வரும் 22-ம் தேதி தமிழகத்தில் வாக்களர் இறுதி பட்டியலை வெளியிடுகிறது. தேர்தல் வாக்காளர் பட்டியலில் குளறுபடி ஏற்படுத்தும் வகையிலான திமுகவின் சதி செயல்களை அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து கண்காணித்து தடுக்க வேண்டும். மறைந்த முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா (ஜன.17) நிகழ்ச்சியில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதுடன், அதிமுக ஆட்சியின் சாதனைகள், திமுகவின் அவலங்களை மக்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டும் என பழனிசாமி அறிவுறுத்தினார்.

போக்குவரத்துறை அமைச்சர், அதிமுகவின் தூண்டுதலின் பேரில்தான் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்துவதாக தெரிவித்திருந்தார். தொழிற்சங்கங்கள் முன்வைத்த 6 கோரிக்கைகளில் ஒன்றை கூடவா நிறைவேற்ற முடியவில்லை.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு சினிமா விழாவில் வெறும் 899 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்வில் முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் கருணாநிதியால் உயர்ந்தவர்தான் எம்ஜிஆர் என்று சொல்லியிருக்கின்றனர். எம்ஜிஆர் மூலம் தான் முதல்வர் பதவிக்கு வந்தேன் என கருணாநிதியே கூறியிருக்கிறார். அப்படியிருக்கும் வரலாற்றை மாற்றி பேசுவது நியாயமா, இதனை அதிமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே கொளத்தூர் தொகுதியில் அதிமுக பூத் கமிட்டியின் செயல்பாடு திருப்தி இல்லாததால், புதிய பூத் கமிட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான குழு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தனித்தனியாக ஆலோசனை: நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் மாவட்ட செயலாளர்களை தனித்தனியாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று மாலை சந்தித்தார். அப்போது நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்குசாவடி முகவர்களை சரியாக தேர்வுசெய்வது குறித்தும், தேர்தல் பணிகளை சீர்மிக செய்வது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியுள்ளார்.

முன்னதாக ராயப்பேட்டை ஆலோசனை கூட்டத்தில் மக்களவை தேர்தல் கூட்டணி குறித்த முடிவை நான் பார்த்துக்கொள்கிறேன். தேர்தல் கூட்டணி முடிவானதும் வேட்பாளர்களை இறுதி செய்துகொள்ளலாம் என்றும் பழனிசாமி தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x