பேருந்து ஸ்டிரைக் நிலவரம் முதல் அண்ணாமலை கேள்வி வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.9, 2024

பேருந்து ஸ்டிரைக் நிலவரம் முதல் அண்ணாமலை கேள்வி வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.9, 2024
Updated on
2 min read

தமிழகத்தில் பேருந்துகள் இயக்கம் எப்படி?: போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நீண்ட கால கோரிக்கைகளான 6 அம்ச கோரிக்கைகளில் ஒன்றைக் கூட ஏற்க மறுக்கும் தமிழக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து செவ்வாய்க்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன. அதன்படி, தமிழகம் முழுவதும் தொடங்கிய போராட்டத்தால் ஓரளவு பாதிப்பு ஏற்பட்டதாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில், ‘செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி, தமிழகம் முழுவதும் இயக்கப்பட வேண்டிய 17,302 பேருந்துகளில் 16,547 பேருந்துகள், அதாவது 95.6% பேருந்துள் இயக்கப்பட்டுள்ளன’ என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறும்போது, “பயணிகள் எந்தவித அச்சமின்றி, பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ள அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் இயக்கத்தினை அனைத்து போக்குவரத்துக் கழக பணியாளர்கள் முழுமையாக கண்காணித்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000: தமிழகத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கப் பணம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

நிரந்தர ‘மதச்சார்பு சிறுபான்மையினர்’அந்தஸ்து சான்றிதழ்: “மாநில அரசால் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதச்சார்பு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இனி வருங்காலங்களில் இச்சான்றிதழ் காலம் குறிப்பிடப்படாமல் நிரந்தர சான்றிதழாக வழங்கப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் சேர்த்தல் குறித்து நிதி நிலை அறிக்கையில் நல்ல செய்தி வெளிவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

10,11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றமில்லை: தமிழகத்தில் 10,11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றமில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலால் பொதுத்தேர்வு பாதிக்கப்படுமா என்ற சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

முதலீட்டாளர் மாநாடு: தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி: “உத்தரப் பிரதேசம் 33 லட்சத்து 51 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்கும்போது, தமிழகம் 6.6 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை மட்டும் ஈர்ப்பது ஏன்?” என்று தமிழக அரசுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், அதானி ஏதோ மோடியின் சொத்து, அதானிக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருக்கிறது. பாஜகவுக்கு அதானிதான் நிதி உதவி செய்கிறார் என்பது போல பலவற்றை அன்று கூறினார்கள். ஆனால், இப்போது அதானியிடமிருந்து 42 ஆயிரத்து 768 கோடி வந்த பிறகு, ட்விட்டரில் திமுகவின் தலைவர்கள், முதல்வர் என அனைவரும் பாராட்டுகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

ராமர் கோயில் திறப்பு விழா - பாஜக மீது மம்தா விமர்சனம்: “மக்களை மத அடிப்படையில் பிரிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து ஒற்றுமையைப் பற்றி பேசும் விழாக்களை நான் நம்புகிறேன். மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோயில் திறப்பு விழாவின் மூலம் பாஜக வித்தை காட்டி வருகிறது” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

“இந்திய பிரதமர் அவமதிக்கப்படுவதை ஏற்க முடியாது”: பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்த மாலத்தீவு அமைச்சர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், இந்திய பிரதமர் அவமதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மாலத்தீவு அமைச்சர்கள் பேசியதை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வதாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கெ கருத்து தெரிவித்துள்ளார்.

லாலுவின் மனைவி மகள் மிசா பாரதி மீது குற்றப்பத்திரிகை: ரயில்வே வேலைக்கு நிலம் வாங்கியது தொடர்பான வழக்கில் பிஹார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, அவரது மகள் மிசா பாரதி பெயரில் முதல் குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது. இந்தக் குற்றப்பத்திரிகையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் குடும்பத்துக்கு நெருக்கமானவராக அறியப்படும் அமித் கத்யால், சில தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

“அதிபரை பதவி நீக்க வேண்டும்”- மாலத்தீவு எதிர்க்கட்சி எம்.பி.: மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அதற்கேற்ப நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஆசிம் வலியுறுத்தியுள்ளார்.

‘நாட்டில் இதுவரை இல்லாத அளவாக 10% வேலைவாய்ப்பின்மை’: நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக 10% வேலைவாய்ப்பின்மை நிலவுவதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு, விவசாயிகள் சந்தித்து வரும் பேரழிவு உள்ளிட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கான மிகப் பெரிய மேடையாக ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை திகழும் என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in