Published : 09 Jan 2024 04:31 PM
Last Updated : 09 Jan 2024 04:31 PM
சென்னை: தமிழகத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கப் பணம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கப் பணம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஜன.1-ம் தேதி, பொங்கல் தொகுப்பில் தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவற்றை கொள்முதல் செய்து வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதில், 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், முகாம் வாழ் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு ரூ.35.20 விலையில் ஒரு கிலோ அரிசியும், ரூ.40.61 செலவில் ஒரு கிலோ சர்க்கரையும், ரூ.33 செலவில் ஒரு கரும்பும் கொள்முதல் செய்ய, ரூ.238 கோடியே 92 லட்சத்து 72 ஆயிரத்து 741 ஒதுக்கப்பட்டு, நிர்வாக ஒப்புதலும் வழங்கப்பட்டது.
ஆனால், அந்த அரசாணையில் ரொக்கத் தொகை குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.தீவிர ஆலோசனைக்குப் பிறகு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இது குறித்து தமிழக அரசு கடந்த ஜன.2-ம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு பண்டிகை பொங்கல் விழாவாகும். இந்த நன்னாளை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.
மேலும், முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தால், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி - சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து, இவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
மேலும், பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாட, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசாக நியாய விலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில் கடந்தாண்டு வரை 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால், பொங்கல் பரிசு பெறுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள், கார் வைத்திருப்போர் என பல்வேறு வகைகளில் பயனாளிகள் வடிகட்டப்பட்டனர். இதையடுத்து, வெள்ள நிவாரணம் வழங்கப்படும் போதும் இதேபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பொங்கல் பரிசுத் தொகைக்கும், தரவு அடிப்படையிலான நிர்வாகம் என்ற அடிப்படையில் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்ததால் பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன.
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு டோக்கன் வழங்கப்பட்ட நிலையில், கட்டுப்பாடுகள் தொடர்பாக வாக்குவாதங்கள் எழுந்தன. இதையடுத்தே, தமிழக அரசு தற்போது அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கப் பணம் மற்றும் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT