Published : 08 Jan 2024 05:51 AM
Last Updated : 08 Jan 2024 05:51 AM

கிளாம்பாக்கத்தில் புதிய காவல் நிலையம் திறப்பு: ஓர் ஆய்வாளர், 12 உதவியாளர் உட்பட 67 பேர் நியமனம்

கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தொடங்கப்பட்டதையடுத்து புதிதாக கிளாம்பாக்கம் காவல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஓர் ஆய்வாளர் தலைமையில் 12 உதவியாளர்கள் உள்ளிட்ட 67 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வண்டலூருக்கு அருகில் உள்ள கிளாம்பாக்கத்தில் டிச. 30-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் புதிய பேருந்து நிலையத்தை திறந்துவைத்தார். இந்நிலையில் கிளாம்பாக்கத்தில் காவல் நிலையம் திறக்க ரூ.6.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது.

இதன் ஒரு பகுதியாக புதிய காவல் நிலையம் திறப்பதற்கு ரூ.6,55,91,916 ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிதாக அமையவுள்ள இந்த காவல் நிலையத்தில் 2 காவல் ஆய்வாளர்கள், 5 உதவி ஆய்வாளர்கள், 8 தலைமைக் காவலர்கள்,10 முதல் நிலைக் காவலர்கள், 55 இரண்டாம் நிலை காவலர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

காவல் நிலையத்துக்கு 2 ஜீப், 7 மோட்டார் சைக்கிள்கள் வாங்கப்படும். அதேபோல மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு ரூ.3,27,800, ஸ்கேனர், வாக்கி டாக்கி, வயர்லஸ் கருவிகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்குவதற்கு ரூ.5,85,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டதை தொடர்ந்து தாம்பரம் மாநகர ஆணையர் அமல்ராஜ் அங்கு பணியாற்ற ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி பள்ளிக்கரணை காவல் நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர் ஆல்பின்ராஜ் கிளாம்பாக்கம் காவல் நிலையத்துக்கு ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து ஒரு பெண் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 12 உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் 12 தலைமை காவலர்கள், 11 முதல்நிலைக் காவலர்கள், 31 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அனைவரும் உடனடியாக காவல் நிலையத்தில் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த காவல் நிலையத்துக்கு கிளாம்பாக்கம், காரணை- புதுச்சேரி, ஐய்யஞ்சேரி, உனைமாஞ்சேரி, வண்டலூர் பூங்கா ஆகிய பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வண்டலூர் காவல் உதவி ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த காவல் நிலையம் இயங்கும்.

இந்நிலையில் கிளாம்பாக்கத்துக்கு என தனியாக காவல் நிலையம் இல்லை. பேருந்து நிலையத்தில் சிறிய அளவில் புற காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதில் தான் தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் காவல் நிலையம் கட்டப்பட உள்ளது என இருந்தாலும் தற்போது பணிக்கு சேர்ந்துள்ள போலீஸாருக்கு போதிய அடிப்படை வசதி இல்லை என கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x