

வத்திராயிருப்பு: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 40 அடியாக தொடர்ந்து நீடித்து வருகிறது. அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப்படுவதால், ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிளவக்கல் அணை மூலம் கூமாபட்டி, கொடிக்குளம், கான்சாபுரம், மகாராஜபுரம், வ.புதுப்பட்டி, வத்திராயிருப்பு, சுந்தர பாண்டியம், நத்தம்பட்டி, மூவரைவென்றான், மங்கலம், பாட்டக்குளம், விழுப்பனூர், நெடுங்குளம், குன்னூர் உள்ளிட்ட 17 வருவாய் கிராமங்களில் உள்ள 40 கண்மாய்கள் நிரம்பி, 7,219 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதே போல், பெரியாறு பிரதானக் கால்வாய் நேரடி பாசனம் மூலம் 960 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பிளவக்கல் அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்காக கடந்த நவம்பர் 27-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது முதல் 7 நாட்களுக்கு விநாடிக்கு 150 கன அடி வீதமும், அடுத்து நீர் இருப்பை பொருத்து தேவைக் கேற்ப பிப்ரவரி மாதம் வரை அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், 47 அடி உயரம் கொண்ட பிளவக்கல் பெரியாறு அணை நீர்மட்டம் 40 அடியாகவும், 42 அடி உயரம் உள்ள கோவிலாறு அணை நீர்மட்டம் 38 அடியாகவும் உள்ளது.
இதையடுத்து, அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு பிளவக்கல் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 58 மி.மீ. மழை பெய்தது. இதையடுத்து, பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடிக்கு மேலும், கோவிலாறு அணையிலிருந்து 100 கன அடி நீரும் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து, கண்மாய் மற்றும் குளங்களின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. எனவே, பிப்ரவரி இறுதி வரை தட்டுப்பாடின்றி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் நிலை உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.