Last Updated : 07 Jan, 2024 07:09 PM

4  

Published : 07 Jan 2024 07:09 PM
Last Updated : 07 Jan 2024 07:09 PM

“இபிஎஸ் திகார் சிறை செல்லும் ரகசியத்தை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்வேன்” - ஓபிஎஸ்  

கிருஷ்ணகிரியில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

கிருஷ்ணகிரி: இபிஎஸ் விரைவில் திகார் சிறைக்கு செல்வார் எனப் பேசியது குறித்து சொல்லும் இடத்தில் சொல்வேன் என கிருஷ்ணகிரியில் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கூறினார்.

கிருஷ்ணகிரி, சேலம் சாலை ஆவின் மேம்பாலம் அருகில் மீனாட்சி மஹாலில் பன்னீர்செல்வம் அணியினர் சார்பில் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்புகுழு ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கும் அதிமுகவுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கட்சி தொடங்கப்பட்டு 50 ஆண்டு காலத்தில், கட்சியை மெருகூட்டிய ஜெயலலிதாவை முதல்வராக ஆகுவதற்கு அச்சாரம் போட்டது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பர்கூர் சட்டப்பேரவை தொகுதி. அதற்காக அதிமுக தொண்டர்கள் ஒவ்வொரும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

தமிழக முதல்வராக ஜெயலலிதா, 16 ஆண்டுகள் ஆட்சி செய்து, ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார். அவை பொதுமக்களிடம் இன்றளவும் செயல்பாட்டில் உள்ளது. திமுகவின் பல்வேறு சதிகளை முறியடித்து, அதிமுகவுக்கு ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கி கொடுத்தவர் ஜெயலலிதா. கட்சியை உருவாக்கிய எம்ஜிஆர் உருவாக்கிய சட்டவிதிகளை தகர்த்து, தனக்கு தானே மகுடம் சூட்டி கொண்டவர் இபிஎஸ், ஜெயலலிதாவுக்கு ஒதுக்கப்பட்ட நிரந்தர பொதுச்செயலாளர் பதவியை மாற்றி விதிகளை திருத்தி சதி செய்துள்ளனர். ஜமீன்தார், பணம் படைத்தவர்கள் மட்டும் கட்சி பொதுச்செயலாளர் ஆகும் வகையில் விதிகளை மாற்றி தொண்டர்களை அவமானப்படுத்தியுள்ளனர். இதனால் தொண்டர்கள் கொதிப்படைந்துள்ளனர். கட்சிக்காகவும், ஆட்சிக்காகவும் பல்வேறு தியாகங்களை செய்தவன் நான். ஆனால் தொண்டர்களின் உரிமையை பறிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. 50 ஆண்டுகாலம் வளர்த்த கட்சியை இன்று இபிஎஸ், மூலம் நசுக்கப்பட்டுள்ளது. இதை தொண்டர்களுடன் இணைந்து விரைவில் மீட்டெடுப்போம். என்றார்.

அனைத்து தேர்தல்களிலும் தோல்வி: பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கிய போது அடிப்படை தொண்டர்களும் பொதுச்செயலாளர் ஆகும் வகையில் பல்வேறு சட்டவிதிகளை வகுத்தார். அவற்றை தகர்த்து, அடிப்படை தொண்டர்களின் உரிமையை பறித்து இபிஎஸ், அதிமுக பொதுசெயலாளராகி உள்ளார். இதனை எதிர்த்து தொண்டர்கள் சார்பில் அதிமுக மீட்புகுழு கூட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்துகிறோம். இரு அணிகளாக செயல்பட்டு வாக்குகளை உடைப்பதால்தான் அதிமுகவால் வெற்றி பெற முடியவில்லை. இபிஎஸ்., முதல்வராகி, பொதுச்செயலாளர் ஆன பின் அவர் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளார். ஆனால் அதைப்பற்றி கவலையில்லாமல் தனக்கு தானே பொதுச்செயலாளர் பதவியை சூட்டி மோசமான சூழலை இபிஎஸ், ஏற்படுத்திவிட்டார்.

இணைந்தால் தான் வெற்றி..அதிமுகவின் பல பிரிவுகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்தித்தால்தான் வெற்றி பெற முடியும். ஏற்கனவே டிடிவி தினகரனுடன் இணைந்து விட்டோம். கொள்கை ரீதியாக அவர்கள் சில கோரிக்கைகள் வைத்துள்ளனர். நாங்கள் சில கோரிக்கைகளை வைத்துள்ளோம். சசிகலாவும் எங்களுடன் இணைந்து செயல்படவுள்ளார். அதை அவரே விரைவில் அறிவிப்பார். தர்மயுத்தம் நடத்தியபோது என்னுடன் இணைந்து செயல்பட்டு, எங்களால் வளர்க்கப்பட்டவர் முனுசாமி. அதன்பின் பழனிசாமியுடன் இணைந்து, ரகசிய கூட்டணி வைத்து எங்களையே முதுகில் குத்தினார். அவரை விமர்சிக்க அவசியமில்லை. நம்பிக்கை துரோகிகள் யார் என்பது மக்களுக்கு தெரியும். நாங்கள் கட்சியின் நலனுக்காக இணைந்து செயல்பட தயார்.

இறுதியில் வெற்றி பெறுவோம்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீதிமன்றம் பழனிசாமியை ஆஜராக வேண்டும் எனவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனக்கூறியதையும் வரவேற்கிறோம். அ.தி.மு.க., மீட்பு சட்ட போராட்டத்திலும் நாங்கள் எந்த சூழலிலும் நீதிமன்றத்தை விமர்சிக்கவில்லை. உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி வருகிறோம். இறுதியில் வெற்றி பெறுவோம். மக்களவைத் தேர்தல் குறித்து பல்வேறு கட்சிகளுடன் பேச்சு நடந்து வருகிறது. இதுகுறித்து முதலில் பத்திரிக்கையாளர்களுக்கு தான் சொல்வோம். பழனிசாமி விரைவில் திகார் ஜெயிலுக்கு செல்வார் என பேசியது குறித்து விளக்கமாக சொல்ல முடியாது. அது ரகசியம், நான் சொல்லும் நேரத்தில், சொல்லும் இடத்தில் சொல்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வின் போது பன்னீர் செல்வம் அணியின் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ்பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x