

சென்னை: நீலகிரியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த பெண் சரிதா மற்றும் சிறுமியின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இருவரது குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், நீலகிரி மாவட்டம், ஏலமன்னா கிராமம், மேங்கோ ரேன்ஜ் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த சரிதா(29) கடந்த 29.12.2023-ம் தேதி அன்றும், மேங்கோ ரேன்ஜ் (அஞ்சல்), எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி நான்சி (4) என்பவர் கடந்த 06.01.2024 அன்றும் சிறுத்தை தாக்கியதன் காரணமாக உயிரிழந்தார்கள் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
விலை மதிப்பில்லாத இந்த இரு உயிரிழப்புகளை சந்தித்துள்ள குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியாக தலா 10 லட்சம் ரூபாய் தமிழக அரசின் சார்பில் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன், என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த மாதம் முதல் சிறுத்தை ஒன்று சுற்றிக் திரிகிறது. கடந்த மாதத்தில் தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த 3 பெண்களை தாக்கியது.படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 3 பேரில், பெண் ஒருவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, வனத்துறையினர் 5 இடங்களில் கூண்டு வைத்தும், பல இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தியும் சிறுத்தையை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், கொளப்பள்ளி பகுதியை அடுத்த சேவியர்மட்டம் பகுதியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை தாக்கி தப்பிச் சென்றது. பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சைப் பலனின்றி அச்சிறுமி உயிரிழந்தார்.