Published : 07 Jan 2024 12:35 PM
Last Updated : 07 Jan 2024 12:35 PM

“தமிழக பொருளாதாரம் அதிவிரைவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது” - முதல்வர் ஸ்டாலின் @உலக முதலீட்டாளர்கள் மாநாடு

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உரையாற்றும் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “தொழில்மயமாக்கல் வரலாற்றில் ஒரு மகத்தான அத்தியாயமாக இந்த மாநாடு இருக்கப்போகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில், தமிழ்நாடு முக்கியப் பங்காற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன்தான், 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று ஒரு லட்சிய இலக்கை நான் நிர்ணயித்துள்ளேன்” என்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடங்குகியது. இந்த 2 நாள் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2024 சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஜன.7, 8-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்காக பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்படி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று காலை 10 மணிக்கு மாநாடு தொடங்கியது. மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசுகையில், “தொழில்துறையில் மேன்மையும், தனித்த பெருமையும் கொண்ட மாநிலம்தான் தமிழ்நாடு. பண்டைய காலத்தில் இருந்து கடல்கடந்தும் வாணிபம் செய்தனர். அதனால்தான், திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழி உருவானது.

இந்தியாவுக்கு பல்வேறு வகைகளில் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலம். 1920-ம் ஆண்டு தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பு எனப்படும் தொழில் அதிபர்கள் அமைப்பு தொடங்கப்பட்டது. இதனால்தான் தமிழ்நாடு அனைத்துவகை தொழில்களிலும் முன்னேறிய மாநிலமாக இன்றைக்கு இருக்கிறது. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கிற மாநிலமாக இருப்பதால், திறமையான தொழிலாளர்கள் ஏராளமாக தமிழகத்துக்கு கிடைத்தனர். சிறந்த தொழிலதிபர்களும், திறமையான தொழிலாளர்களும் நிறைந்த தமிழ்நாட்டுக்கு உலக தொழில் முனைவோரான நீங்கள் வந்துள்ளீர்கள். நாங்கள் விடுத்த அழைப்பை ஏற்று வந்துள்ள அனைவரையும் வரவேற்பதுடன், எனது உளமார்ந்த நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாநாட்டுக்கு வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை நான் மனமார வரவேற்கிறன். அவரது குடும்பம் அரசியல் குடும்பம். அவரது அப்பா அம்மா இருவருமே அரசியலில் கோலோச்சியவர்கள். வங்கித் துறை பணியாளராக வாழ்க்கையைத் தொடங்கி நிதி மற்றும் வர்த்தக துறையில் சாதனை படைத்தவர் பியூஷ் கோயல். அவர் இங்குவந்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் அனைத்து துறை செயலர்கள், அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்.

உலக நாடுகளை உள்ளடக்கிய இந்த நிகழ்வில், அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய 9 நாடுகள் எங்களுடன் பங்குதாரர் நாடுகளாக இணைந்துள்ளனர். மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தைவான் மற்றும் பொருளாதார நிறுவனங்களும் எங்களுடன் இணைந்து செயல்பட்டு உள்ளனர்.

பொருளாதார வளர்ச்சியில் அதிவிரைவு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டுக்கு கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலமாகவும், தொழில் வளர்ச்சிக்கும் இந்த மாநாடு வழிவகுத்துக் கொடுக்கும். முன்னணி நிறுவனங்கள், வணிக அமைப்புகள் மற்றும் நிகழ்வில் கலந்துகொண்டுள்ள அனைவருக்கும் இந்த மாநாடு பயனுள்ளதாக அமையும்.

இந்த மாநாட்டில் நாங்கள் பல்வேறு சிறப்பம்சங்களை அளிக்கவிருக்கிறோம். தலைமைத்துவம், நீடித்து நிலைத்த தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கருப்பொருள்களில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. கடந்த இரண்டரை ஆண்டு காலமாகவே, முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடுதான் என தமிழகம் அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த நிலையை மேம்படுத்துகிற வகையிலும், மாநிலத்தினுடைய ஈர்ப்புத்திறன் உலகுக்கு வெளிப்படுத்தவும் இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகிறோம்.

நாங்கள் துறைவாரியாக மேற்கொண்ட முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதில் பெருமளவு முதலீடுகளை ஈர்த்து சாதனைகளையும் படைத்துள்ளோம். உங்களைக் காணும்போது, இந்த மாநாடு சாதனைகளை படைக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. தொழில்மயமாக்கல் வரலாற்றில் ஒரு மகத்தான அத்தியாயமாக இந்த மாநாடு இருக்கப்போகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில், தமிழ்நாடு முக்கியப் பங்காற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன்தான், 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று ஒரு லட்சிய இலக்கை நான் நிர்ணயித்துள்ளேன்.

உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, மற்றும் வேலைவாய்ப்பு மிகுந்து முதலீடுகளை ஈர்ப்பது, என்ற இருமுனை அணுகுமுறையை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். ஒரு மாநிலத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்றால், அந்த மாநிலத்தின் ஆட்சி மீது நல்ல எண்ணம் இருக்க வேண்டும். அங்கு சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் பேணப்பட்டு அமைதியான சூழல் நிலவ வேண்டும். ஆட்சியாளர்கள் மீது உயர் மதிப்பு இருக்க வேண்டும். மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருக்க வேண்டும்.

2021-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதல், இந்த அம்சங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருப்பதால்தான், தொழில்துறையில் ஏராளமான முதலீடுகள் குவிகிறது. முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளை முன்கூட்டியே கணித்து, இன்றைய தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. வணிகம் புரிதலை எளிதாக்கி வருகிறோம். திறன்மிகு பணியாளர்களை உருவாக்கி வருகிறோம். நாளைய தொழில் மாற்றங்களை கணித்து வைத்திருக்கிறோம். தொழிலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இடையே இணைப்பினை ஏற்படுத்தி வருகிறோம். தொழிற்சாலைகளுக்கு ஏற்ப தொழிலாளர்களை தயார்படுத்தி வருகிறோம். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து வருகிறோம்.

இளைஞர்களின் திறனுக்கேற்ற வேலைகளை உறுதி செய்து தருகிறோம். திறமையான இளைய சக்திகளை உருவாக்கித் தருவதை நோக்கமாக கொண்டது தமிழ்நாடு அரசு. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பெண்களை முன்னிலைப்படுத்துவது. தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக திகழ்வது. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தமிழ்நாட்டில் இருந்துதான் உருவானார். பெரியார், அண்ணா, கருணாநிதியின் அடியொற்றி, பெண்களுக்கு சமூக, கல்வி, பொருளாதார ரீதியாக அதிகாரமளிக்கும் திட்டங்களை இந்தியாவுக்கே முன்னோடியாக செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.

பெண்களுக்கான பொருளாதார விடுதலை என்பது இந்த திராவிட மாடல் அரசின் முழக்கம். அதனால்தான் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், விடியல் பயணம், தோழி விடுதி என அறிவித்து பெண்களின் முன்னேற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம். கடந்த இரண்டரை ஆண்டு ஆட்சிக் காலத்தில், பெருமளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டதுடன், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குகிற வகையில் 200-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று முதல்வர் பேசினார்.

இந்த மாநாட்டின் தொடக்க விழாவில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். தமிழக தொழில்துறை அமைச்சர்டி.ஆர்.பி.ராஜா வரவேற்புரையும், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா நன்றியுரையும் நிகழ்த்தினர். அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 35 நாடுகளில் இருந்து பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்கள் மாநாட்டில் பங்கேற்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x