

சென்னை: சென்னையில் நடந்துவரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழக முதல்வர் முன்னிலையில் டாடா எலெக்ட்ரானிக்ஸ், பெகட்ரான், டிவிஎஸ் குழுமம், மிட்சுபிஷி, ஏ.பி. மோலார் மெர்ஸ்க், ஹுண்டாய், JSW, அசோக் லேலண்ட் மற்றும் வின்பாஸ்ட் ஆகிய முக்கிய நிறுவனங்களின் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
சென்னை வர்த்தக மையத்தில் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024”-ஐ தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து, முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, நிறுவனங்களின் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன.7) சென்னை வர்த்தக மையத்தில், இரண்டு நாள் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024”-ஐ தொடங்கி வைத்தார். விழாவில் தலைமையுரை ஆற்றிய முதல்வர், தமிழ்நாட்டில் நிலவும் சிறந்த தொழில் சூழல் பற்றி எடுத்து கூறினார். > “தமிழக பொருளாதாரம் அதிவிரைவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது” - முதல்வர் ஸ்டாலின் @உலக முதலீட்டாளர்கள் மாநாடு
இம்மாநாட்டில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளி அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இந்நிகழ்ச்சியின் தொடக்க உரை ஆற்றினார்.
இந்த நிகழ்வில், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பன்னாட்டு தூதரக அதிகாரிகள், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி. அருண்ராய், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே. விஷ்ணு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் தலைவர்கள் / தலைமை செயல் அலுவலர்கள், தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.