15 இந்திய மாலுமிகள் மீட்பு முதல் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.6, 2024

15 இந்திய மாலுமிகள் மீட்பு முதல் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.6, 2024
Updated on
3 min read

கடத்தப்பட்ட 15 இந்திய மாலுமிகள் மீட்பு: சோமாலியா அருகே இந்திய மாலுமிகள் 15 பேருடன் கடத்தப்பட்ட ‘எம்.வி லீலா நார்போக்’ சரக்கு கப்பலை, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சென்னை போர்க் கப்பலின் கமாண்டோக்கள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு மீட்டனர். இந்நிலையில், கப்பலில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட இந்தியர்கள் "பாரத் மாதா கி ஜெய்" என்று கோஷமிட்டு, இந்திய கடற்படைக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு - ஞாயிறு முதல் டோக்கன் விநியோகம்: தமிழகத்தில் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொங்கல் பரிசுத் தொகுப்பு வரும் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை விநியோகம் செய்யப்படவுள்ளது. இதற்கான டோக்கன் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஜனவரி 9-ம் தேதி வரை டோக்கன் வழங்கப்படுகிறது.

டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு ரேஷன் கடைக்குச் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். அதேபோல், 13-ம் தேதிக்குள் பரிசு தொகுப்பை பெற முடியாதவர்கள், 14-ம் தேதியும் பரிசத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இணைப்பு வசதியின்றி திணறும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்”: “மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம், சென்னையின் பிற பகுதிகளுக்கு பயணிகள் செல்ல போதிய இணைப்பு வசதி இல்லாமல் கடுமையாக நெருக்கடிகளையும், பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. கிளாம்பாக்கத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இணைப்பை ஏற்படுத்தித் தருவதற்கு சிறந்த வழி விமான நிலையம், கிளாம்பாக்கம் மெட்ரோ தொடர்வண்டித் திட்டத்தை செயல்படுத்துவது தான். கிளாம்பாக்கம் மெட்ரோ பணிகளை உடனே தொடங்க வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி சரமாரி கேள்வி: “தமிழகத்தின் கடனைப் பற்றி பேசுகிற அண்ணாமலை, மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு கால கடன் சுமை ரூ.100 லட்சம் கோடி அதிகரித்திருப்பதைப் பற்றி என்ன பதில் கூறப் போகிறார்? இதற்கான விளக்கத்தை தருவாரா? தொலைக்காட்சி ஊடகங்கள் மைக்கை நீட்டினால் அற்ப விளம்பரத்துக்காக எத்தகைய அவதூறையும் பேசிவிடலாம் என்று அண்ணாமலை நினைத்தால் அதிலிருந்து அவர் தப்பிக்க முடியாது" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

‘அயோத்தி ராமர் கோயில் ஆன்மிகப் பயணத்துக்கு உதவி’: “அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகின்ற பக்தர்களிடமிருந்து ஏதாவது கோரிக்கை வரப்பெற்றால், முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று அவர்கள் செல்வதற்கு உண்டான உதவிகளை செய்வதற்கு இந்து சமய அறநிலைத் துறை தயாராக இருக்கின்றது” என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். மேலும், "கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என்ற பெயர் வைத்ததில் எந்த தவறும் இல்லை" என்று அவர் விளக்கம் அளித்தார்.

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு - சீறிப் பாய்ந்த காளைகள்: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெறுவது வழக்கம். தச்சங்குறிச்சி விண்ணேற்பு அன்னை ஆலய ஆண்டுத் திருவிழா, புத்தாண்டையொட்டி நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு, நிகழாண்டில் சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. ஆட்சியர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டை, மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஜல்லிக்கட்டு முடிந்ததாக அறிவிக்கப்பட்டதும், ஆங்காங்கே காளைகளை அவிழ்த்துவிடக் கூடாது என ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆதித்யா எல்-1 சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு: ஆதித்யா எல்-1 விண்கலம் சூரிய ஒளி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பின் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “இந்தியா புதிய மைல்கல்லை எட்டி, இன்னொரு அடையாளத்தை உருவாக்கியுள்ளது. நமது விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும். மிகவும் சிக்கலான நுணுக்கமான சாதனையை படைத்துள்ளது இஸ்ரோ. விஞ்ஞானிகளின் இந்த அசாதாரண சாதனையை நாட்டு மக்களுடன் இணைந்து பாராட்டுகிறேன். மனிதகுலம் பயன் பெறும் வகையில் அறிவியலில் புதிய எல்லைகளை அடைய இந்தியா தொடர்ந்து பணியாற்றும்" என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

தமிழகத்தில் கன முதல் மிக கனமழை வாய்ப்பு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

பத்திரப் பதிவு துறை மீது அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு: “தமிழகத்தில் பத்திரப் பதிவுத்துறையில் இமாலய ஊழல் நடைபெற்று வருகிறது. ஒரு பத்திரத்துக்கு ரூ.5500 வசூலிக்கிறார்கள். இதை அமைச்சருக்கான கட்டணம் என்கின்றனர். தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு அலுவலகங்களில் புரோக்கர்கள் லாபி நிலவுகிறது. சில புரோக்கர்களை பார்த்து பணம் கொடுத்தால் இரவு 6 மணிக்கு மேலும் பத்திரப் பதிவு செய்யலாம்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

டேவிட் வார்னர் ஓய்வு; ஸ்டீவ் ஸ்மித் விருப்பம்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான இடது கை வீரர் டேவிட் வார்னர், சிட்னியில் ஆஸ்திரேலியாவின் மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற ஒயிட்வாஷ் டெஸ்ட் தொடர் வெற்றியோடு தன் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

இதனிடையே, "இனி வார்னருக்குப் பதில் தான் தொடக்க வீரராக இறங்குவதை எதிர்நோக்குகிறேன். டெஸ்ட் போட்டிகளை தொடங்க நான் விருப்பமாயிருக்கிறேன்" என்று ஆஸ்திரேலியாவின் மற்றொரு லெஜண்ட் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

தனது கடைசி போட்டிக்கு பின் கேண்டீஸ்... உலகம் என்றால் நீதான் எனது அர்த்தம். குடும்பத்துக்காக அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என்பதாலேயே ஓய்வு முடிவு எடுத்தேன்" என்று தனது மனைவி குறித்து உணர்வுபூர்வமாக பேசியிருக்கிறார் வார்னர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in