“புதிய மைல்கல்... விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்புக்குச் சான்று” - ஆதித்யா எல்-1 சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு

“புதிய மைல்கல்... விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்புக்குச் சான்று” - ஆதித்யா எல்-1 சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு
Updated on
1 min read

புதுடெல்லி: "மனிதகுலம் பயன் பெறும் வகையில் அறிவியலில் புதிய எல்லைகளை அடையும் வகையில் இந்தியா தொடர்ந்து பணியாற்றும்" என்று ஆதித்யா எல்-1 விண்கலம் சூரிய ஒளி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பின் பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சூரியனை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற அதிநவீன விண்கலத்தை வடிவமைத்தது. இதில் வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம், வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் பல்கலைக்கழக மையம், இந்திய அறிவியல் கல்வி மற்றும்ஆராய்ச்சிக் கழகம் ஆகியவை முக்கியப் பங்காற்றின. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் கடந்த செப். 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தை பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ.தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் (Lagrangian Point One) எனும் புள்ளிக்கு மிக அருகே நிலைநிறுத்த இஸ்ரோ முடிவு செய்தது.

அதன்படி, 127 நாட்கள் பல்வேறுகட்ட தடைகளைக் கடந்து, சூரியனை நோக்கி சீரான வேகத்தில் பயணித்த ஆதித்யா விண்கலம், தற்போது எல்-1 புள்ளியை மையமாகக் கொண்ட சூரிய ஒளி வட்டப் பாதையில் (Halo Orbit) இன்று மாலை 4 மணியளவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து பிரதமர் மோடி இஸ்ரோவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியா புதிய மைல்கல்லை எட்டி, இன்னொரு அடையாளத்தை உருவாக்கியுள்ளது. நமது விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும். மிகவும் சிக்கலான நுணுக்கமான சாதனையை படைத்துள்ளது இஸ்ரோ. விஞ்ஞானிகளின் இந்த அசாதாரண சாதனையை நாட்டு மக்களுடன் இணைந்து பாராட்டுகிறேன். மனிதகுலம் பயன் பெறும் வகையில் அறிவியலில் புதிய எல்லைகளை அடைய இந்தியா தொடர்ந்து பணியாற்றும்" என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in