

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கந்திகுப்பம் என்னுமிடத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக கிடப்பில் உள்ளதாக 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கந்திகுப்பம் கிராமம் அமைந்துள்ளது.
இக்கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். கந்திகுப்பத்தை சுற்றிலும் வரட்டனப்பள்ளி, மிட்டப்பள்ளி, அச்சமங்கலம், பத்தலப்பள்ளி, எலத்தகிரி, கோனேரிகுப்பம், பாலேப்பள்ளி, பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளி உட்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
மேலும், கந்திகுப்பத்தில் இருந்து வரட்டனப்பள்ளி வழியாக ஆந்திர மாநிலம் குப்பம், சித்தூர், திருப்பதி உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் சாலை உள்ளது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையை ஓட்டியுள்ள இக்கிராமத்தில் ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் சாலையை அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை காணப்படுகிறது.
நாள்தோறும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்குச் செல்வோர் என குறைந்தது 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களும், இரு சக்கர வாகனங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் தேசிய நெடுஞ்சாலையை அச்சத்துடன் கடந்து சென்று வரும் நிலை காணப்படுகிறது.
இவ்வழியே அதிவேகமாகச் செல்லும் வாகனங்களில் சாலையை கடக்கும்போது சில நேரங்களில் விபத்துகளில் சிக்கி உயிரிழப்புகளும், உடலுறுப்பு இழப்புகளும் ஏற்படுகிறது. எனவே, இவ்விடத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என கந்திகுப்பம் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும், இதுவரை நடவடிக்கை இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கந்திகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த மருதுராஜன் கூறும்போது, கிருஷ்ணகிரி -சென்னை தேசிய நெடுஞ்சாலை பணிகளின் போதே இங்கு மேம்பாலம் அமைக்க திட்டமிடவில்லை. இதனால் இங்கு விபத்துகளில் அதிகளவில் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகிறது.
குறிப்பாக கடந்த 2017-ம் ஆண்டு நடந்த விபத்தில், 3 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து வன்முறை நிகழ்ந்தது. தொடர்ந்து அமைதி பேச்சு வார்த்தை நடத்தி அலுவலர்கள், மேம்பாலம் கட்டிட ஆய்வுகள் மேற்கொண்டு, அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், இதுவரை மேம்பாலம் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மக்கள் அச்சத்துடன் கடந்து செல்லும் அவலநிலை நீடிக்கிறது. அதிவேகத் தில் செல்லும் வாகனங்களால், சாலையை கடக்கும் சிலர் விபத்துகளில் சிக்கும் நிலை தொடர்கிறது.
எனவே, 50-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நலனை கருத்தில் கொண்டு, கந்திகுப்பத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும், என்றனர்.