

யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு ரூ.1,000?: பொங்கல் திருநாளைச் சிறப்பாக தமிழக மக்கள் கொண்டாடிட ஏதுவாக பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது, வரும் 10-ம் தேதியன்றே வரவுவைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
மத்திய - மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக ரேஷன் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை” - அமைச்சர் தங்கம் தென்னரசு: “மாநில அரசுக்கு உதவும் வகையில் மத்திய அரசு எதாவது செய்துள்ளதா என்று பார்த்தால் இல்லை என்பதே வருத்தமளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது” என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சென்னையில் நடந்த விழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் இருந்து பெற்ற வரியை விட தமிழக அரசுக்கு அதிகமாக நிதி வழங்கப்படுகிறது என்று கூறி வரி பகிர்வு குறித்து கருத்துக்கள் தெரிவித்தார். இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இவ்வாறு தெரிவித்தார்.
இதனிடையே “இந்திய மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மத்திய அரசு தமிழக மக்களுக்காகச் செய்தது என்ன?" என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
“அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை” - உச்ச நீதிமன்றம்: ஒரு அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிரான மனு ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடியான நிலையில், மேல்முறையீட்டு வழக்காக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில்தான் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இபிஎஸ் ஆஜராக உத்தரவு: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 30 மற்றும் 31-ம் தேதிகளில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - ஐகோர்ட்டில் மனு: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரியும், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரியும், துப்பாக்கிச் சூட்டில் பலியான இளம்பெண் ஸ்னோலினின் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
“தமிழகத்தில் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்களே இல்லை”: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் 8,643 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றில் 1,500 பணியிடங்களுக்கு மட்டும் புதிய இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்திருக்கிறது. இப்படி இருந்தால் அரசு பள்ளிகள் எவ்வாறு முன்னேறும்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்கங்த்தில் அமலாக்கத் துறை குழு மீது தாக்குதல்: மேற்கு வங்கத்தில் ரேஷன் விநியோக ஊழல் தொடர்பாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மண்டல அளவிலான தலைவர்கள் வீட்டில் சோதனை நடத்தச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவம், வடக்கு 24 பர்கானாஸ் மாட்டத்தின் சந்தேஷ்காலி கிராமம் அருகே நடந்ததாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
மதுரா மசூதியை அகற்றக் கோரிய மனு தள்ளுபடி: கிருஷ்ணஜென்ம பூமி வழக்கில், ஷாயி ஈத்கா மசூதியை அகற்றக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
வேலைநிறுத்த முடிவு தொடரும் என தொழிற்சங்கங்கள் அறிவிப்பு: அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இரண்டாவது முறையாக போக்குவரத்து தொழிற்சங்களுடன் சென்னையில் அமைச்சர் எஸ்எஸ்.சிவசங்கர் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர் அமைச்சர் சிவசங்கர் கூறும்போது, “ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.
அதேவேளையில், தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறும்போது, "இன்றைய பேச்சுவார்த்தையில் அமைச்சரிடம் எங்களின் 6 கோரிக்கைகளை விளக்கிச் சொன்னோம். ஞாயிற்றுக்கிழமை அரசின் முடிவு குறித்து தெரிவிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். எனவே, ஞாயிறு வரை அமைச்சரின் பதிலுக்கு காத்திருக்கிறோம். அதுவரை வேலைநிறுத்த முடிவு தொடரும். வேலை நிறுத்தத்துக்கான பிரச்சாரமும் தொடரும்" என்று தெரிவித்தனர்.
சீன அரசாங்கத்தின் முக்கியமான செய்தி ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையில் ‘இந்தியா தன்னை உலகின் ஆளுமை சக்தியாக நிலைநிறுத்திக் கொள்ள எடுக்கும் ஆக்கபூர்வ நடவடிக்கைகள், அதன் செயல்பாட்டு உத்தி ஆகியன போற்றத்தக்கது. இந்தியா நிச்சயமாக ஒரு சர்வதேச சக்திதான்’ என்று சிலாகித்து எழுதப்பட்டுள்ளது.