Published : 05 Jan 2024 04:35 PM
Last Updated : 05 Jan 2024 04:35 PM

“தமிழக மக்களுக்கு மத்திய அரசு செய்தது என்ன?” - முதல்வர் ஸ்டாலின் @ நிதி பகிர்வு விவகாரம்

சென்னை: “இந்திய மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மத்திய அரசு தமிழக மக்களுக்காகச் செய்தது என்ன?" என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் நடந்த விழாவில் வியாழக்கிழமை பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழகத்தில் இருந்து பெற்ற வரியை விட தமிழக அரசுக்கு அதிகமாக நிதி வழங்கப்படுகிறது” என்று கூறி வரி பகிர்வு குறித்து கருத்துகளைத் தெரிவித்தார். நிர்மலா சீதாராமனின் இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, "மத்திய அரசு மாநில அரசுக்கு உதவும் வகையில் எதாவது செய்துள்ளதா என்று பார்த்தால் இல்லை என்பதே வருத்தமளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது" என்று கூறி மத்திய அரசு இதுவரை வழங்கிய நிதி குறித்து புள்ளி விவரங்களை வெளியிட்டு விளக்கமளித்தார்.

இதன் தொடர்ச்சியாக, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் இந்த விளக்கத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், "பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கி இந்த இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது திராவிட மாடல் அரசு.

ஆட்சி அமைந்தது முதல், மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் அளவுக்கு செலவில் மிச்சம், காலை உணவுத் திட்டம் மூலம் பணிச்சுமைக் குறைப்பு, புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக மாதம் 1000 ரூபாய், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் எனப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசின் நிதியினைக் கொண்டு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது திராவிட மாடல் அரசு.

இந்திய மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மத்திய அரசு, தமிழக மக்களுக்காகச் செய்தது என்ன? மத்திய நிதியமைச்சரின் பேச்சுக்கு விரிவான பதில் தந்திருக்கிறார் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு" என்று பதிவிட்டுள்ளார்.

நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன? - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, “தமிழகத்துக்கு மத்திய அரசு ஒன்றுமே செய்வது இல்லை என்கின்றனர். ‘நாங்கள் கொடுக்கும் வரியைதானே கேட்கிறோம், அதிகாரத்தோடு, உரிமையோடு கேட்கிறோம்’ என்று சொல்பவர்களுக்கு சில விஷயங்களை கூற விரும்புகிறேன். வரியில் இருந்து கிடைக்கும் தொகையைதான் மத்திய அரசு பங்கிட்டு வழங்குகிறது.

வந்தே பாரத் ரயில் தயாரிப்பை சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் நிறுவனத்துக்குதான் மத்திய அரசு வழங்கியுள்ளது. அது தமிழகத்துக்கு கொடுத்ததாக கணக்கில்லையா? ரூ.1,260 கோடியில் சென்னையின் புதிய விமான முனையம், 170 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில், ரூ.50 ஆயிரம் கோடியில் சென்னை - பெங்களூரு விரைவு சாலை, ரூ.3 ஆயிரம் கோடியில் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் போன்ற திட்டங்களை மத்திய அரசுதான் செயல்படுத்தி வருகிறது.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து தமிழகத்துக்கு ரூ.2 லட்சத்து 88 ஆயிரத்து 627 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மானியமாக ரூ.2 லட்சத்து 58 ஆயிரத்து 338 கோடி வழங்கப்பட்டுள்ளது. நிதி ஆணைய பரிந்துரை இல்லாமல் மாநில வளர்ச்சிக்காக சிறப்பு திட்டத்தின்கீழ் 50 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப செலுத்தும் வகையில் ரூ.6,412 கோடி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்துக்கு இதுவரை ரூ.6 லட்சத்து 96 ஆயிரத்து 666 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் இருந்து நேரடி வரியாக ரூ.6 லட்சத்து 23 ஆயிரத்து 713 கோடி மட்டுமே கிடைக்கப் பெற்றது.

இதுதவிர, 1996-97 காலகட்டத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த வகையில் தமிழகத்துக்கான ரூ.3,225 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதை மத்திய அரசு தராமல்கூட இருந்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. செஸ் வரி வகையில் வசூலிக்கப்பட்ட தொகையில் இருந்து நெடுஞ்சாலை அமைக்க ரூ.37,965 கோடி, பள்ளிகளுக்கு ரூ.11,116 கோடி, வீடு கட்டும் திட்டத்தில் ரூ.4,739 கோடி, கிராம சாலைகள் திட்டத்துக்கு ரூ.3,637 கோடி வழங்கப்பட்டுள்ளது. மாநில ஜிஎஸ்டி வரி வருவாயில் 100 சதவீதமும் மாநிலங்களுக்கே வழங்கப்படுகிறது. மத்திய ஜிஎஸ்டி ரூ.27,360.95 கோடியில் 41 சதவீதம் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.

இவ்வாறு மத்தியில் வசூலிக்கப்படும் தொகை மொத்தமாக மாநிலத்துக்கே திருப்பி வழங்கப்படுகிறது. விரோத மனப்பான்மையுடன் தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் நாங்கள் வைத்துக் கொள்ளவில்லை. சொன்ன தேதியில் வழங்கப்படுவதோடு, சில நேரங்களில் முன்னதாகவே வழங்கப்பட்டுள்ளது” என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

தங்கம் தென்னரசு பதில்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அளித்துள்ள பதிலில், “ஒன்றிய அரசு 2014 - 15ம் ஆண்டு முதல் 2022 - 23 ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ ரூ.4.75 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்துக்கு வழங்கியுள்ளது. இந்த ரூ.4.75 லட்சம் கோடியில் ரூ.2.46 லட்சம் கோடி என்பது மத்திய வரிகளில் இருந்து வரி பகிர்வாகவும், அதேபோல ரூ.2.28 லட்சம் கோடி என்பது தமிழகத்துக்கு கிடைக்கக்கூடிய மானியங்கள் மற்றும் உதவித்தொகை அடிப்படையில் வழங்கப்பட்டவை.

அதேநேரத்தில் நேரடி வரிவருவாயாக தமிழகத்தில் இருந்து ரூ.6.23 லட்சம் கோடி ஒன்றிய அரசு பெற்றுள்ளது. ஆனால், மறைமுக வரிவருவாய் குறித்து எந்த தரவுகளையும் அவர்கள் பகிர்ந்து கொள்ளவில்லை. தமிழகத்தில் இருந்து ஒன்றிய அரசுக்கு செல்லும் ஒரு ரூபாய்க்கு மீண்டும் அங்கிருந்து தமிழகத்துக்கு கிடைப்பது 29 பைசாதான். இதை ஏற்கனவே சட்டசபையில் கூறியுள்ளேன். ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த விகிதாச்சாரம் முற்றிலும் மாறுபட்டு உள்ளது. உதாரணத்துக்கு 2014 - 15ம் ஆண்டு முதல் 2022 - 23ம் ஆண்டு வரை பார்த்தால் பாஜக ஆளும் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் இருந்து ரூ.2.23 லட்சம் கோடி ஒன்றிய அரசுக்கு கொடுத்தால், அந்த மாநிலத்துக்கு மத்திய அரசு மூலமாக ரூ.15.35 லட்சம் கோடி திரும்ப கிடைத்துள்ளது.

12-வது நிதிக் குழு சமயத்தில் மத்திய வரியில் இருந்து தமிழகத்துக்கு 5.305% வரி பகிர்வாக நிதி ஆணையம் வழங்கியது. அதுவே, தற்போதுள்ள 15வது நிதிக் குழுவை எடுத்துக்கொண்டால், 4.079% ஆக குறைந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய உரிய நிதி வரவில்லை என்பதற்கு உதாரணமே இந்த புள்ளி விவரங்கள். இந்திய அளவில் இருக்கக்கூடிய மக்கள் தொகையில் 6.124% மக்கள் தொகை கொண்ட தமிழகத்துக்கு மத்திய நிதி ஆணையத்தில் இருந்து கிடைக்க வேண்டிய தொகையில் 4.079% மட்டுமே கிடைக்கிறது என்றால், நமக்கு கிடைக்க வேண்டிய சரியான தொகை கிடைக்கவில்லை என்பதே அர்த்தம்.

செஸ் மற்றும் கூடுதல் வரியை தனிப்பட்ட வருவாயாக மத்திய அரசு பெற்றுக்கொண்டு வருகிறது. இந்த வரியின் மூலமாக 2011-12ல் 10.04% மத்திய அரசு பெற்றது. அதுவே, தற்போது 28.01% அதிகரித்துள்ளது. ஒன்றிய அரசுக்கு தனிப்பட்ட வருவாயாக இது கிடைக்கிறது. தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தொகை குறைந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது. ஜிஎஸ்டி அமல்படுத்தும்போது மாநிலங்களுக்கான பங்கின் வருடாந்திர வளர்ச்சி என்பது 14 சதவீதமாக இருக்கும் என்றார்கள்.

ஆனால், அந்த அளவுக்கு வரவில்லை என்பது நிச்சயம். இதனால், தமிழகத்தின் நிதி ஆளுமைக்கான உரிமையை இழந்திருக்கிறோம். இதன்காரணமாக தமிழகத்தின் நிதி பற்றாக்குறை ரூ.20 ஆயிரம் கோடியாக இருக்கிறது. ஜிஎஸ்டி இழப்பீடு காலத்தை நீடிக்க 2022க்கு பிறகு கோரிக்கை விடுத்தும் ஒன்றிய அரசு நீடிக்கவில்லை.

சென்னை மெட்ரோ 2-வது கட்ட திட்டம் ரூ.63,246 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 50 சதவீத நிதியை ஒன்றிய அரசு தரவேண்டும். இந்த திட்டத்துக்கான அடிக்கல்லை உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டினார். ஆனால், இன்று வரை அதற்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை. அதே காலகட்டத்தில் மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படும் மெட்ரோ திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. உத்தரபிரதேசம், டெல்லி, ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மற்ற மாநிலங்களுக்கு மெட்ரோ திட்டங்களுக்கு உரிய நிதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் 10 ஆயிரம் கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், சென்னை மெட்ரோ திட்டத்தை பொறுத்தவரை வெறும் 3,273 கோடி ரூபாய் தான் ஒன்றிய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அளவில் ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கக்கூடிய சதவீதம் என்பது 2.05% என்றுதான் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.18,000 கோடி தமிழகத்துக்கு கிடைத்துள்ளது.

ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் ஒன்றிய அரசு ரூ.72,000 கொடுக்கிறது. ஆனால், தமிழக அரசு ரூ.1.68 லட்சம் கொடுக்கிறது. அதேபோல், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்துக்கு ஒன்றிய அரசு ரூ.1,50 லட்சம் கொடுக்கிறது. ஆனால், தமிழக அரசு ரூ.7 லட்சம் தருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்களாக இருந்தாலும் சரி, அவர்களின் நிதியுதவியுடன் நடக்கும் திட்டங்களாக இருந்தாலும் சரி மாநில அரசு அதிகமான பங்களிப்பை வழங்குகிறது. பெற்ற வரியை விட 2 மடங்காக நிதி கொடுத்துள்ளோம் என 10 ஆண்டுகளாக ஒன்றிய அரசு தெரிவிக்கிறது. ஆனால், விலைவாசி உயர்வு, பண மதிப்பு அதிகரிப்பு ஆகியவற்றை எல்லாம் ஒன்றிய அரசு கருத்தில் கொள்ளவில்லை.

மிக்ஜாம் புயல், தென்மாவட்ட வெள்ளம் ஆகியவற்றுக்காக கோரப்பட்ட வெள்ள நிவாரண நிதியை ஒன்றிய அரசு தற்போது வரை வழங்கவில்லை. மாநில அரசின் நிதியிலே, இதுவரை ரூ.2,027 கோடி வெள்ள நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகள் முழுவதும் மாநில அரசின் நிதியில் நடக்கிறது. ஒன்றிய அரசு உரிய பங்களிப்பை அளித்தால் இன்னும் வேகமாக பணிகளை முடிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x