Published : 05 Jan 2024 06:10 AM
Last Updated : 05 Jan 2024 06:10 AM
கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் அமைச்சர் சேகர்பாபு நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். புதியதாக கட்டப்பட்ட இப்பேருந்து நிலையத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு நேற்று திடீர் ஆய்வுமேற்கொண்டார். அப்போது பேருந்து நிலையத்தில் மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், மாநகரப் பேருந்து நிறுத்துமிடத்தில் அதிக அளவிலான பயணிகள் வருவதால் எப்போதும் கழிப்பறையை சுத்தம் செய்யவும், சுத்தம் செய்வதற்கு கூடுதலாக பணியாளர்களை நியமிக்கவும், மாநகரப் பேருந்துகள் நிறுத்துமிடத்துக்கும், விரைவு பேருந்துகள் நிறுத்தும் இடத்துக்கும் இடையே உள்ள சுவர் இடிக்கப்பட்ட நிலையில், விரைந்து படிக்கட்டுகள் மற்றும் நடமாடும் படிக்கட்டுகள் அமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசும்போது, “பள்ளி நேரத்தில் காலை மற்றும் மாலையில் ஜி.எஸ்.டி சாலையின் சர்வீஸ் சாலையில் பேருந்துகள் இயக்கப்படாது. பேருந்து நிலையத்தின் கழிப்பறைகள் அனைத்தும் சுத்தமாக உள்ளன. போதுமான அறிவிப்பு பலகைகள் உள்ளன. அனைத்து குடிநீர் குழாய்களிலும் குடிநீர் வருகிறது. குப்பைகள் எதுவும் இல்லை.
புதியதாக அமைக்கப்பட்டுள்ள காலநிலை பூங்கா பிப்ரவரி மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும். கிளாம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு விரைந்து கொண்டுவர ரூ.20 கோடியை ரயில்வே துறையிடம் வழங்கி உள்ளோம்.
பொதுமக்களை அழைத்து செல்ல வசதியாக கூடுதலாக 3 பேட்டரி வாகனங்கள் வாங்க உள்ளோம். அதில் ஒன்று மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். புதியதாக கிளாம்பாக்கம் காவல் நிலையம் அமைக்கும் பணிகள் மிக விரைவில் தொடங்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT