கலைஞர்களை கவுரவிப்பதில் மியூசிக் அகாடமி ஒரு முன்மாதிரி: சிங்கப்பூர் தூதரக தலைவர் எட்கர் பாங் ஸி சியாங் புகழாரம்
சென்னை: `தென்னிந்தியக் கலைகளின் பாரம்பரியத்தையும் கலைஞர்களையும் கவுரவிப்பதில் மியூசிக் அகாடமி கடந்த 90 ஆண்டுகளாக ஒரு முன்மாதிரி அமைப்பாக திகழ்கிறது' என்று சிங்கப்பூர் குடியரசு தூதரகத்தின் தலைவர் எட்கர் பாங் ஸி சியாங் புகழாரம் சூட்டினார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற மியூசிக் அகாடமியின் 17-வது ஆண்டு நாட்டிய விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்த அவர், வசந்தலக்ஷ்மி நரசிம்மாச்சாரிக்கு மியூசிக் அகாடமி சார்பில் `நிருத்திய கலாநிதி' விருதை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: இந்த விழாவில் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறேன். சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் இருக்கும் கலைசார்ந்த தொடர்புகள் பலமானவை.
`நிருத்திய கலாநிதி' விருதைப் பெற்றிருக்கும் வசந்தலக்ஷ்மியும் அவரின் குருவும் கணவருமான நரசிம்மாச்சாரியும் 'சிங்கப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி'யில் பல ஆண்டுகளுக்கு முன்பே நாட்டிய ஆசிரியர்களாக பணியாற்றிபல மாணவர்களை உருவாக்கினர்.இந்தியர்கள், மலாய் மற்றும் சீனர்களை உள்ளடக்கி, பன்முக கலையைப் பறைசாற்றும் நாட்டியவடிவங்களை ரசிகர்களுக்கு வழங்கினர். இவ்வாறு அவர் பேசினார்.
`நிருத்திய கலாநிதி' விருதைப் பெற்ற வசந்தலக்ஷ்மி நரசிம்மாச்சாரி பேசியதாவது: மிகவும் சிறிய வயதிலேயே எனக்கு பரதநாட்டியக் கலையை அறிமுகப்படுத்திய என்னுடைய பெற்றோருக்கும் பல்வேறு நாட்டியங்களை கற்றுக் கொடுத்த குருமார்களுக்கும் நன்றி. என்னுடைய நாட்டியத்தை மேம்படுத்திய குருவும் எனது கணவருமான நரசிம்மாச்சாரிக்கு நன்றி. என்னை இந்த விருதுக்கு தேர்வு செய்த மியூசிக் அகாடமிக்கு என்னுடைய நன்றி. என்னுடன் நாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சக கலைஞர்கள், ஆதரித்த பல சபாக்கள், உலகம் முழுவதும் இருக்கும் என்னுடைய மாணவர்கள், என்னுடைய மகள்கள் அனைவருக்கும் நன்றி.
இந்த விருதை வசந்தலக்ஷ்மி என்னும் எனக்கு கிடைத்ததாக நினைக்கவில்லை. எனக்குள் மூச்சாக இருக்கும் பரதநாட்டியக் கலைக்கான அங்கீகாரமாகவே இந்த விருதை ஏற்றுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக வரவேற்புரையாற்றிய மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி பேசியதாவது: சென்னைக்கான சிங்கப்பூர் குடியரசு தூதரகத்தின் தலைவர் எட்கர் பாங் ஸி சியாங் இந்த விழாவில் பங்கேற்க சம்மதித்ததில் மிகவும் மகிழ்ச்சி. சிங்கப்பூர் அரசின் வெளியுறவுச் சேவையில் பாங் 1997-ல் சேர்ந்தார்.
`நிருத்திய கலாநிதி' விருதாளர் வசந்தலக்ஷ்மி நரசிம்மாச்சாரி பரதநாட்டியத்தோடு குச்சிபுடி உள்ளிட்ட பல நாட்டிய வகைமைகளையும் அறிந்தவர். அவருக்கு வீணை வாசிக்கவும் தெரியும். பரதநாட்டியக் கலையின் செழுமையை பரப்பிவருபவர். இந்தாண்டு நாட்டிய விழாவில், பரதநாட்டியம், குச்சிபுடி, கதக், யக் ஷகானம், மோகினியாட்டம் நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், மியூசிக் அகாடமி நடத்திய `ஸ்பிரிட் ஆஃப் யூத்' போட்டியில், சிறந்த நடனக் கலைஞருக்கான சுந்தரம் ஃபாஸ்டனர்ஸுக்கான விருதை கோபிகா ராஜ் பிள்ளை, பிருந்தா ராமச்சந்திரன் (2-ம் இடம்), சிறந்த நடன குருவுக்கான விருதை டாக்டர் கே.நிர்மலா நாகராஜன் ஆகியோர் பெற்றனர்.
ஹெச்.சி.எல். நடத்திய நடனப் போட்டியில் வென்ற ஸ்ரீமா உபாத்யாய, ஆண்டின் மத்தியில் நடந்த போட்டிகளில் சிறந்த நடனக் கலைஞராக பி.வி. ஆதித்யா, அபிநயம், நிருத்தியம் உள்ளிட்ட ஒட்டுமொத்த நடனத் திறமைகளை வெளிப்படுத்திய கலைஞராக அவ்ஜித் தாஸ் ஆகியோர் விருதுகளைப் பெற்றனர். நிகழ்ச்சியை என். ராம்ஜி தொகுத்து வழங்கினார். காயத்ரி கிருஷ்ணன் நன்றி கூறினார்.
