Published : 03 Jan 2024 06:12 AM
Last Updated : 03 Jan 2024 06:12 AM

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் செல்ல புதிய வழி: பொங்கலுக்கு முன்பு பணிகள் முடியும் என அமைச்சர் உறுதி

கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் குறித்து ‘இந்து தமிழ் திசை'யில் நேற்று கட்டுரை வெளியானது. அதில், மாநகர பேருந்து நிறுத்தத்தில் இருந்து வெளியூர் பேருந்து நிலையத்துக்கு செல்ல நேரடியாக வழி இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து புதிய வழி அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. படம்: எம்.முத்துகணேஷ்

கிளாம்பாக்கம்: 'இந்து தமிழ் திசை' நாளிதழில் நேற்று கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகளின் தேவை குறித்த விரிவான செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று மாநகர பேருந்து நிறுத்தத்தில் இருந்து, வெளியூர் பேருந்து நிறுத்தத்துக்கு பயணிகள் நேரடியாக செல்ல வழி அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு முன்பு, பயணிகளுக்கான வசதிகள் முழுமையாக ஏற்படுத்தப்பட்டு, அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த பேருந்து முனையம் குறித்த விரிவான செய்தி 'இந்து தமிழ் திசை' நாளிதழில் நேற்று வெளியானது. பொதுமக்களுக்கு என்னென்ன தேவைகள் இருக்கிறது என்பது குறித்த பொதுமக்களின் கருத்துகள் இந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக மாநகர பேருந்து நிறுத்தப்படும் இடத்தில் இருக்கை வசதி, வெளியூர் பேருந்து நிலையத்தில் இருந்து நேரடியாக மாநகர பேருந்து நிறுத்தத்துக்கு செல்வதற்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் சுட்டிக் காட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில் நேற்று சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் வெளியூர் பேருந்துநிலையத்தில் இருந்து மாநகரபேருந்து நிலையத்துக்கு செல்லவசதியாக, புதிதாக பாதை அமைக்கும் பணியை தொடங்கி உள்ளனர். ஓரிருவாரங்களில் இந்த பணி முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மக்களின் பிரச்சினைகளை முறையாக ஆய்வு செய்து செய்தியாக வெளியிட்டு தீர்வை ஏற்படுத்திய 'இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு பயணிகள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிலையில், நேற்று சென்னையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு கிளாம்பாக்கம் பேருந்துநிலைய பணிகள் குறித்து கூறியதாவது: கோயம்பேட்டில் இருந்து முன்பதிவு செய்தவர்களுக்கு கூடுதல் கட்டணத்தை வங்கிகணக்கில் திருப்பி செலுத்துவதாக கூறியிருந்தோம்.

அதில் தாமதம் உள்ளதால் நடத்துநர் மூலமாக கையிலேயே கொடுக்கிறோம். உண்மையான பிரச்சினை மாநகரப் பேருந்துகளில் இறங்கி வெளி மாவட்டபேருந்துகளுக்கு செல்வதுதான். பேட்டரி கார் உள்ளது. கூடுதல் பேட்டரி கார் ஏற்பாடுசெய்யப்படவுள்ளது. புதிதாக திறக்கப்பட்ட இடம். அதில் குறைகள் இல்லை என்று சொல்லவில்லை.

மக்கள் பயன்பாட்டுக்கு வந்து 48மணி நேரம்தான் ஆகிறது. அங்குள்ள குறைகள் 2 - 3 நாட்களில் சரிசெய்யப்படும். தினந்தோறும் கண்காணிக்கிறோம். கிளாம்பாக்கத்தில் அம்மா உணவகம் தேவை என்றால் பரிசீலிக்கப்படும். பொங்கல்வரையில் மக்கள் தேவையை பூர்த்தி செய்யும்நடவடிக்கைகளை எடுக்கிறோம்.

நகரில்போக்குவரத்து நெரிசலை குறைக்கதான் இந்த திட்டம். விமான நிலையம் அளவுக்குபேருந்து நிலையம் உள்ளது. கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி ஒதுக்கி ரயில் நிலையம் கொண்டு வரப்படவுள்ளது. ஆகாய நடைபாதையும் ரூ.120 கோடியில் உருவாக்கப்படவுள்ளது. நில எடுப்பு பணிகளுக்காக ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணித்து தேவையான பணிகளை செய்வோம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x