Published : 25 Dec 2023 06:12 AM
Last Updated : 25 Dec 2023 06:12 AM
சென்னை: எண்ணூரில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் சென்னையில் மீன்களின் விற்பனை குறைந்துள்ளது. இதுகுறித்து, பொதுமக்களிடையே மீன்வளத் துறை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மிக்ஜாம் புயலின்போது பெய்தஅதிகனமழை காரணமாக, எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, எண்ணெய் அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு தற்போது முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட்டது. இந்த எண்ணெய் கசிவு காரணமாக, மீன்களின் விற்பனை குறைந்துள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, மீனவர்கள் கூறும்போது, ‘‘எண்ணூர் முகத்துவாரத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால்மக்கள் மீன்களை வாங்க அச்சப்படுகின்றனர். எண்ணெய் கசிவால் மீன்கள் பாதிக்கப்பட்டிருக்கும். அவற்றை உண்டால் உடல்நிலையும் பாதிக்கும் என அஞ்சி மீன்களை வாங்க தயங்குகின்றனர். இதனால், மீன்களின் விற்பனை குறைந்துள்ளது. அத்துடன், தற்போது சபரிமலை சீசன் என்பதால் பல குடும்பங்கள் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். இதுவும் மீன்கள் விற்பனை குறைந்துள்ளதற்கு காரணமாக உள்ளது. மீன்கள் விற்பனையை அதிகரிக்க, மக்களிடையே விழிப்புணர்வை மீன்வளத் துறையினர் ஏற்படுத்த வேண்டும்’’ என்றனர்.
அகில இந்திய மீனவர் சங்க நிறுவனர் எம்.இ.ராஜா கூறும்போது, ‘‘காசிமேடு மீனவர்கள் பொதுவாக ஆழ்கடல் பகுதிக்கு சென்றுதான் மீன் பிடிக்கின்றனர். குறிப்பாக, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் முதல் ஒடிசா மாநிலம் வரை சென்று மீன் பிடிக்கின்றனர். இதனால், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விற்பனை செய்யப்படும் மீன்கள் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. அதேநேரத்தில், தற்போது தண்ணீர்மேல் படர்ந்த எண்ணெய் படலம் அகற்றப்பட்டுள்ளது.
எண்ணூர் முகத்துவாரம் மற்றும் காசிமேடு துறைமுகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆழ்கடலில் படிந்துள்ள எண்ணெய் கசிவு உள்ளிட்ட நச்சுக் கழிவுகளை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும்’’ என்றார். இதுபற்றி மீன்வளத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘எண்ணூர் முகத்துவாரத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு முற்றிலும் அகற்றப்பட்டு விட்டது. மேலும், அப்பகுதியில் உள்ள மீன்களை ரசாயன பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம். இதுவரை முடிவுகள் வரவில்லை. மீனவர்கள் கேட்டுக் கொண்டால் விழிப்புணர்வு ஏற்படுத்த தயாராக உள்ளோம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT