எண்ணூரில் சிபிசிஎல் நிறுவனத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மத்திய அரசிடம் கொண்டு செல்வதாக பாஜக உறுதி: பிரேமலதா விஜயகாந்த் தகவல்

எண்ணூரில் சிபிசிஎல் நிறுவனத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மத்திய அரசிடம் கொண்டு செல்வதாக பாஜக உறுதி: பிரேமலதா விஜயகாந்த் தகவல்
Updated on
1 min read

சென்னை: எண்ணூரில் சிபிசிஎல் நிறுவனத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்வதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் தன்னிடம் உறுதியளித்துள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார். சென்னை, வியாசர்பாடியில் உள்ள முதியோர் இல்லத்தில் தேமுதிக சார்பில் கிறிஸ்துமஸ் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவைத்தலைவர் வி.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகளையும் பிரேமலதா வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கட்சி, ஆட்சி என அனைத்து இடங்களிலும் முக்கிய பொறுப்பில் இருப்பவர் உதயநிதி. ஒரு வார்த்தையை பேசும்முன் சிந்திக்க வேண்டும். அவரதுவயதுக்கு அவர் பேசிய வார்த்தைகளை மத்திய நிதியமைச்சர் மட்டுமின்றி, அனைவரும் கண்டிக்கும் நிலை இருக்கிறது. அமைச்சர் உதயநிதி கூற்றுப்படி பார்த்தாலும் தமிழகத்தில் நடக்கும் அத்தனை விஷயங்களும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில்தான் நடக்கிறது. அவை அனைத்தும் மக்கள் வரிப்பணத்தில் செய்யப்பட்டதுதான். எனவே, முக்கிய பொறுப்பில் இருக்கும் அவர் பொறுப்புடன் பேசினால் நல்லது.

ரூ.1 லட்சம் நிவாரணம்: தூத்துக்குடி மக்களுக்கு இது கருப்பு கிறிஸ்துமஸ் விழாதான். அந்தளவு அங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் மீட்புப் பணிகள் முடிந்துவிட்டதாக தலைமைச் செயலர் கூறுகிறார். அது மிகவும் தவறான விஷயம். வைகுண்டம் தனித்தீவாக மாறியுள்ளது. கிராமங்கள் நீரில் முற்றிலும் மூழ்கியிருக்கிறது. பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு ரூ.1 லட்சமாக நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும். பெருவெள்ள மீட்பு களத்தில் ஆளுங்கட்சி இல்லை, மக்கள் கடுங்கோபத்தில் உள்ளனர். உயிரிழந்தோர் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

எண்ணூரில் எண்ணெய்க் கழிவால் படகுகளை இழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும். அதே நேரம், கழிவை வெளியேற்றிய சிபிசிஎல் நிறுவனம் குறித்து மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தொடர்பு கொண்டு வலியுறுத்தினேன். மத்திய அரசு மற்றும் சிபிசிஎல் சார்பில் நிவாரணம் வழங்கப்படும் என இருவரும் உறுதியளித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in