

சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்தது. இந்த தீர்ப்பை தொடர்ந்து, பொன்முடி அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இழந்தார்.
இந்த தீர்ப்பை தொடர்ந்து, நேற்று முன்தினம்சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் இல்லத்துக்கு சென்ற பொன்முடி, உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீடு செய்வது குறித்து முதல்வருடன் சுமார் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடியின் இல்லத்துக்கு தொடர்ந்து செல்லும், சக அமைச்சர்களும், திமுக முக்கிய நிர்வாகிகளும் அவரை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், தனது மகன் துரை தயாநிதியின் சிகிச்சைக்காக, சென்னையில் தங்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேற்றுசைதாப்பேட்டை இல்லத்துக்கு சென்று பொன்முடியை சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் பேசினார்.