Published : 24 Dec 2023 04:06 AM
Last Updated : 24 Dec 2023 04:06 AM
திருப்பூர்: வட மாநிலத் தொழிலாளர்களை கொண்டு தாக்கியதாக கூறி ஊராட்சிமன்ற தலைவரை கைது செய்ய கோரி பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே வேட்டுவபாளையம் ஊராட்சிக்குட்பட்ட சுடுகாட்டின் அருகே கழிவு நீர் தேங்குவதுடன், ஊற்று நீர் சுரக்கிறது. இதனால், சடலங்களை அடக்கம் செய்ய குழி தோண்டும் போது, தண்ணீர் ஊற்று உருவாவதால் சுடுகாட்டுக்குள் சேகரமாகும் கழிவுநீர் மற்றும் ஊற்று நீரை வெளியேற்ற தரைப்பாலம் அமைக்க வேண்டுமென, பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், வேட்டுவபாளையம் ஊராட்சித் தலைவர் மூர்த்திக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையே நேற்று முன்தினம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது, இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஊராட்சி மன்றத் தலைவருடன் வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் மக்களை தாக்கியதால் இருதரப்பு கைகலப்பானது. இதையடுத்து, ஊராட்சி மன்றத் தலைவர் மூர்த்தியை கைது செய்ய கோரி, மங்கலம் சாலையில் பொதுமக்கள் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறும்போது, ‘‘சுடுகாட்டில் சேகரமாகும் கழிவுநீர் மற்றும் ஊற்றுநீரை வெளியேற்ற தரைப்பாலம் அமைக்க திட்டமிடப்பட்ட இடத்தை விட்டுவிட்டு, தனியார் நூற்பாலைக்கு ஏதுவாக தரைப்பாலம் அமைக்க ஊராட்சிமன்றத் தலைவர் மூர்த்தி திட்டமிட்டார். இதுதொடர்பாக எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, வடமாநிலத் தொழிலாளர்களை வைத்து தாக்கினார். எந்த பாரபட்சமுமின்றி ஊராட்சித் தலைவர் மற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
சம்பவ இடத்துக்கு மங்கலம் போலீஸார் சென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கை விட்டனர். வேட்டுவபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் மூர்த்தி கூறும்போது, ‘‘சுடுகாட்டுக்குள் நீர் தேங்குவதை தடுக்கும் வகையில், தரைப் பாலம் அமைக்க 8 அடிக்கு குழி எடுத்து பணிகள் நடைபெற்று வந்தன. கழிவுநீர் உள்ளே செல்வதை தடுக்க சுடுகாடு முழுவதும் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு இடையூறின்றி தரைப்பாலம் அமைக்க வேண்டுமென்பதே நோக்கம்.
ஆனால், நான் சார்ந்த திமுக மற்றும் பாஜக, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து தரைப்பாலம் அமைப்பதற்கு பிரச்சினை செய்து வந்தனர். பேச்சுவார்த்தைக்கு அவர்கள் சார்பில் 4 பேரை வருமாறு கூறியிருந்தேன். ஆனால், 25-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். சிலர் என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தாக்க தொடங்கினர்.
அப்போது, பேச்சுவார்த்தைக்காக இருக்கைகள் போடவும், தேநீர் வாங்கித் தரவும் என்னுடைய தொழிற்சாலையில் வேலை பார்க்கும் வட மாநிலத் தொழிலாளர்களை அழைத்துச் சென்றிருந்தேன். அப்போது, நான் தாக்கப்படுவதை பார்த்து என்னை பாதுகாக்க அவர்களை் தாக்கினர். பின்னர், இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தேன். அரசியல் காழ்ப்புணர்ச்சியில் பொய்யான குற்றச்சாட்டை என் மீது சுமத்துகின்றனர்’’ என்றனர். இது தொடர்பாக மங்கலம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT