

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து இன்று தடுக்கப்பட்டது.
சாத்தூர் ரயில் நிலையத்திலிருந்து ரயில் தண்டவாளங்களை கண்காணிக்க கேங்மேன் பாக்கியராஜ் என்பவர் வழக்கம்போல் இன்று காலை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சாத்தூர் சின்ன ஓடைப்பட்டி அருகே சென்றபோது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டுபிடிக்கப்பட்டதார். இதுகுறித்து உடனடியாக சாத்தூர் ரயில் நிலையத்துக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதேநேரம், அப்போது அந்த வழியாக வந்த மைசூரு - தூத்துக்குடி விரைவு ரயில் வந்துள்ளது. துரிதமாக செயல்பட்டு சிவப்பு கொடியசைத்து கேங்மேன் பாக்கியராஜ் அந்த ரயிலை நிறுத்தினார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அதன்பின்னர் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு தண்டவாளத்தில் இருந்த விரிசல் சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால் சுமார் 40 நிமிடங்கள் மைசூரு- தூத்துக்குடி விரைவு ரயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இதேபோல், சென்னையில் இருந்து நாகர்கோயில் நோக்கிச் சென்ற அந்தியோதயா ரயில் சாத்தூர் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் உடனே கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.