

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
சாத்தூர் அருகேயுள்ள பனையடிப்பட்டியில் ஜெயபால் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. மத்தியபெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கிவந்த இந்த ஆலையில் 20-க்கும் மேற்பட்ட அறைகளில் ஃபேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
தரைமட்டமான அறை: இந்நிலையில், நேற்று காலை30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தனித்தனி அறைகளில் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஓர் அறையில் பட்டாசுக்கான வெடிமருந்துக் கலவை தயார் செய்யும் பணி நடைபெற்றது. திடீரென வெடி மருந்தில் உராய்வு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது.
அந்த அறையில் பணியாற்றிக் கொண்டிருந்த கண்டியாபுரம் சண்முகராஜ் (36) அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் அவசரமாக வெளியேறி உயிர்தப்பினர். தகவலறிந்து வந்தஏழாயிரம் பண்ணை, வெம்பக்கோட்டை, சாத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
ரூ.3 லட்சம் நிவாரணம்: விபத்து தொடர்பாக பட்டாசுஆலை உரிமையாளர் ஜெயபால், மேற்பார்வையாளர் சிவக்குமார் ஆகியோர் மீது ஏழாயிரம் பண்ணைபோலீஸார் 3 பிரிவுகளின் கீழ்வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, தொழிலாளி சண்முகராஜின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரணநிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.