81 டி.எம்.சி தண்ணீர் தராத கர்நாடகா: அனைத்து கட்சித் தலைவர்களுடன் டெல்லிக்கு செல்லுங்கள்: முதல்வருக்கு வாசன் கோரிக்கை

81 டி.எம்.சி தண்ணீர் தராத கர்நாடகா: அனைத்து கட்சித் தலைவர்களுடன் டெல்லிக்கு செல்லுங்கள்: முதல்வருக்கு வாசன் கோரிக்கை
Updated on
2 min read

10 லட்சம் ஏக்கர் சம்பா பயிருக்கு தேவைப்படும் 30 டி.எம்.சி தண்ணீரையாவது பெற ஆட்சியாளர்கள் அனைத்துக்கட்சித் தலைவர்களுடன் டெல்லிக்கு சென்று வலியுறுத்த வேண்டும் என ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கை:

“காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடக அரசின் வீண் பிடிவாதப்போக்கை முறியடிக்க, தமிழக உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு அனைத்து அரசியல் கட்சிகளையும், விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து மத்திய அரசை கண்டிப்போடு வலியுறுத்த வேண்டும்

தமிழக டெல்டா மாவட்டப் பகுதிகளில் 25 இலட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்களில் சுமார் 10 இலட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் போதிய தண்ணீர் இல்லாமல் கருகும் நிலையில் உள்ளது. எனவே டெல்டா மாவட்டப் பகுதிகளில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு இருக்கிறது.

குறிப்பாக கர்நாடக அரசு காவிரி நதியிலிருந்து இதுவரையில் தமிழகத்திற்கு 81 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரையில் கர்நாடக அரசு காவிரி நதியிலிருந்து முறையாக, காலத்தே, கால அட்டவணைப்படி தண்ணீரை திறந்துவிடவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தற்போது சம்பா பயிர்களை காப்பாற்ற இன்னும் சுமார் 55 நாட்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. மேலும் தமிழகத்தில் டெல்டா மாவட்ட பகுதிகளில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை கவனத்தில் கொண்டும், பயிரிடப்பட்ட சம்பா பயிர்களை காப்பாற்றவும் கர்நாடகத்தின் காவிரியிலிருந்து குறைந்த பட்சம் 30 டி.எம்.சி. தண்ணீரையாவது பெறுவதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எனவே கர்நாடக அரசிடம் இருந்து தமிழகத்திற்கு உரிய காவிரி நதிநீரை பெறுவது தொடர்பாக தமிழக அரசு தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும், விவசாயச் சங்க தலைவர்களையும் டில்லிக்கு அழைத்துச் சென்று பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்திற்கு உரிய காவிரி நீரில் குறைந்த பட்சம் 30 டி.எம்.சி. தண்ணீரையாவது கர்நாடக அரசு திறந்துவிட வலியுறுத்த வேண்டும்.

அப்படி குறைந்த பட்சம் 30 டி.எம்.சி. தண்ணீரை பெற முடியாமல் போனால் சம்பா பயிர்கள் கருகிப் போகும் மற்றும் சம்பா பயிரிட்ட விவசாயிகளுக்கு மொத்தம் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு. அது மட்டுமல்ல விவசாயிகள் அடையும் நஷ்டத்தினால் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் அன்றாட வாழ்க்கையே பெரும் சிரமத்திற்கு உட்படும்.

எனவே நமது உணவுக்காக உழைக்கும் விவசாயிகளும், அவர்களின் குடும்பங்களும் நலமுடன் வாழவும், விவசாயத்தொழிலை காப்பாற்றவும் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து நல்ல நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

இதுவரையில் கர்நாடக அரசு காவிரி நதியிலிருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிடாததால் தமிழக விவசாயம் கடந்த பல வருடங்களாக பெரும் பாதிப்புக்கு உள்ளானதை தமிழக அரசு முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் இனியாவது தமிழக உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு அனைத்து அரசியல் கட்சிகளையும், விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடக அரசின் வீண்பிடிவாதப்போக்கை முறியடிக்க மத்திய அரசை கண்டிப்போடு வலியுறுத்த வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in