Published : 06 Jul 2014 10:51 AM
Last Updated : 06 Jul 2014 10:51 AM

97 ஆயிரம் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கைப் பயிற்சி: விபத்தில் இறந்த மகன் பெயரில் தந்தையின் சேவை

புத்திர சோகம் என்பது எந்தப் பெற்றோராலும் தாங்க முடியாத ஒன்று. ஆனால், அந்த சோகத்தையும் பொது நலமாக நடைமாற்றி இருக்கிறார் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு நினைவாற்றல் மற்றும் தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்திவரும் சோம.நாகலிங்கம்.

மதுரையைச் சேர்ந்த சோம.நாகலிங்கம் மத்திய கலால் வரித் துறையில் கண்காணிப்பாளர். இயல்பாகவே கிராமத்துக் குழந்தைகளுக்கு எளிய திறன் பயிற்சிகளை தருவதில் ஆர்வம் கொண்டவர். இன்ஜினீயரிங் படித்துக் கொண்டிருந்த இவரது இளைய மகன் நிகில் 2007 செப்டம்பரில் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். புத்திர சோகத்திலிருந்து மீள, ஏழைக் குழந்தைகள் மீதான மகனின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுத்தார் நாகலிங்கம். அதற்காக, ஒரே மாதத்தில் அவனது பெயரிலேயே ‘நிகில் ஃபவுண்டேஷன்’ தொடங்கியவர், அதன் மூலம் அரசுப் பள்ளிக் குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்துதல், தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகளை நடத்த ஆரம்பித்தார். இதுவரை 97,500 குழந்தைகளுக்கு நினைவாற்றல் மற்றும் தன்னம்பிக்கை பயிற்சிகளை கொடுத்திருக்கும் நாகலிங்கம், அது குறித்து இன்னும் விரிவாக நம்மிடம் பேசினார்.

’’படிப்பை முடித்து நான் ஆஸ்திரேலியாவில் போய் செட்டிலாகிவிடுவேன். நீங்கள் என்னோடு வர சம்மதிக்கமாட்டீர்கள். அதனால, கிராமத்துக் குழந்தைகளை தேடிப் பிடித்து அவங்கள முன்னேற்றுவதற்கு உங்களால முடிஞ்சத செய்யுங்கப்பா..’ நிகில் அடிக்கடி இப்படி என்னிடம் சொல்வான். அவனது எண்ணங்களை பூர்த்தி செய்யுறதுக்காகத்தான் நான் இந்தப் பணியில் இறங்கினேன். அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள்தான் எங்களது இலக்கு. அந்தக் குழந்தைகளிடம் உள்ள நிறை குறைகளை தெரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை, அவர்களே திறன் உள்ளவர்களாக மாற்றிக் கொள்வதுதான் எங்களது பயிற்சி வகுப்புகளின் நோக்கம்.

உங்கள் உரிமைகளை வலியுறுத்தும்போது அது மற்றவரின் உரிமைகளை காயப்படுத்தக் கூடாது. ஒரு விழாவுக்கு உங்கள் பிள்ளையை அழைக்கின்றீர்கள். ‘எனக்கு வரப் பிடிக்கவில்லை’ என்று பிள்ளை சொன்னால் அவனை விட்டுவிட வேண்டும்; கட்டாயப்படுத்தக் கூடாது. வெளிநாடுகளில் எல்லாம் மற்றவர்களின் உரிமைக்கு இப்படித்தான் மதிப்பளிக்கிறார்கள்.

இதையெல்லாம் புரியவைப்ப தற்காக, உன்னை நீ அறிவாய் (அவர்களை அவர்களே அறிந்து கொள்வது), இலக்கை அமைத்து அதை அடைதல், இந்த இரண்டையும் வெளிப்படுத்து வதற்கான கம்யூனிகேஷன் ஸ்கில், நினைவாற்றல் இந்த 4 தலைப்புகளில் தலா ஒரு மணி நேரம் வகுப்பு எடுப்போம். ஒரு பள்ளியில் ஆயிரம் பிள்ளைகள் இருந்தால் அவர்களை 20 வகுப்புகளாக பிரித்துக் கொண்டு 4 ஆசிரியர்கள் சுழற்சி முறையில் ஒவ்வொரு தலைப்பின் கீழும் வகுப்பு எடுப்பார்கள்.

9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ‘வல்லமை காணீர்’ என்ற தலைப்பில் நேர நிர்வாகம், திறமையுடன் முடிவெடுத்தல், தலைமைப் பண்பு இவைகள் குறித்து வகுப்பு எடுப்போம். 6 முதல் 8 வரை படிக்கும் மாணவர்களுக்கு ‘அகம் 5 புறம் 5’ என்ற தலைப்பில் அன்பு செலுத்துதல், நம்பகத் தன்மை உள்ளிட்டவைகளை கதை வடிவிலான பயிற்சிகள் மூலம் சொல்லிக் கொடுப்போம்.

இதில் ஒரு ஆச்சரியம் என்ன தெரியுமா? மெட்ரிக் பள்ளிப் பிள்ளைகளை விட அரசுப் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு உள்வாங்கும் திறன் அதிகமாகவே இருக்கிறது. இது பயிற்சியின் போது நாங்கள் தெரிந்து கொண்ட உண்மை. பயிற்சி கொடுப்பவர்கள் அனைவருமே பல்வேறு துறைகளில் பணிபுரிவதால் சனிக்கிழமைகளில் மட்டுமே பயிற்சி வகுப்புகளை நடத்துகிறோம். இந்தப் பயிற்சி வகுப்புகளை நடத்த ஒரு குழந்தைக்கு அதிகபட்சம் ரூ.40 வரை செலவாகும். பள்ளிகளில் கொடுத்தால் வாங்கிக் கொள்வோம். இல்லாவிட்டால் அறக்கட்டளை நிதியிலிருந்து சமாளித்துக் கொள்வோம்.

மதுரை மட்டுமில்லாமல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் தென் மாவட்டங்கள் அனைத்திலும் ஆண்டுக்கு 15 ஆயிரம் குழந்தைகளுக்கு நாங்கள் பயிற்சி கொடுக்கிறோம். படிக்க வசதியில்லாத ஏழைக் குழந்தைகளை எங்கள் செலவில் படிக்க வைக்க வேண்டும் என்பது நிகிலின் ஆசை. அவனது விபத்து காப்பீட்டுத் தொகை கைக்கு வந்ததும் ஏழைக் குழந்தைகளை எங்கள் செலவில் படிக்க வைப்போம். நம்மால் முடிந்தவரை சக மனிதனை வல்லமைப்படுத்த வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்’’ உறுதியான குரலில் சொன்னார் நாகலிங்கம்.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x