

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என வட மாவட்டங்களை மிக்ஜாம் புயல் புரட்டிப் போட்ட அதிர்வலைகள் அகல்வதற்குள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி என நான்கு மாவட்டங்கள் பெருமழையால் பாதிக்கப்பட்டன. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டன. உள்மாவட்டங்களில் இத்தகைய பெருமழையும், வெள்ளமும் மக்களை மட்டுமல்ல அரசாங்கத்தையும் திகைக்க வைத்தது.
பொதுவாகவே அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்குப் பருவமழை காலம்தான் தமிழகத்துக்கான 40 சதவீத மழையைத் தருகிறது என்றாலும், கூடவே வெப்பமண்டல புயல்கள், திடீர் வெள்ளங்கள் போன்றவற்றால் ஏற்படும் பக்கவாட்டு சேதாரங்களும் தவிர்க்க முடியாதவையாக உள்ளன. அவ்வாறான ஒரு சம்பவமாகத் தான் தென் மாவட்ட மழை பாதிப்பு நிகழ்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவே 70 செமீ தான். ஆனால், மாவட்டத்தின் காயல்பட்டினம் பகுதியில் ஒரே நாளில் 95 செ.மீ மழை பெய்துள்ளது. இது வானிலை ஆராய்ச்சியாளர்களே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காலநிலை மாற்றம் உள்பட பல்வேறு காரணிகளுடன் இதனை அவர்கள் தொடர்புப் படுத்துகின்றனர்.
புயல் ஏற்பட்டாலே 60 முதல் 90 செ.மீ வரை மழை பதிவாகும். ஆனால் இந்த முறை புயலால் அல்லாமல் குமரிக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல உயர்மட்ட இடஞ்சுழிக் காற்று (upper air cyclonic circulation) காரணமாக இந்த மழை பெய்துள்ளது. வழக்கமாக இத்தகைய அமைப்பினால் இவ்வளவு மழை பெய்யாது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக இந்த உயர்மட்ட இடஞ்சுழிக் காற்றுக்கு அதிகமான ஈரப்பதம் கிடைத்தது. இந்த ஈரப்பதம் அதிக மழைக்கு வழிவகுத்துள்ளது. அதனாலேயே ஒரு புயல் தரும் மழையைவிட இந்த அமைப்பு அதிக மழையைத் தந்துள்ளது. இத்தகைய நிலைக்கு காலநிலை மாற்றம் தான் காரணம். காலநிலை மாற்றம் தொடர்பான சில ஆராய்ச்சிகள் இனிவருங் காலங்களில் வடகிழக்குப் பருவமழையின்போது தென் தீபகற்பப் பகுதிகளில் தீவிர மழைப்பொழிவு நிகழ்வுகள் ஏற்படும் என்று எச்சரிக்கின்றன என்று நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
சென்னையைப் போல் தரவுகள் இல்லை: “சென்னையில் கடந்த 1943, 1976, 1985, 1997, 2002, 2005, 2015, 2023 மிக்ஜாம் புயல் தாக்கம் எனப் பல முந்தைய பெருமழை பதிவுகள் உள்ளன. ஆனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களில் இதுபோன்ற வரலாறு ஏதும் இல்லை. இவை வறண்ட காலநில கொண்ட பகுதிகளும்கூட. கடந்த கால தரவுகளை ஒப்பிட்டால் ஒரே நாளில் 20 செமீ மழை பெய்ததே அதிகபட்சமாக இருந்துள்ளது” என்று இந்திய வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ராஜ் கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில், “இது இயல்புக்குப் புறம்பானது மட்டுமல்ல, யாருமே எதிர்பார்க்காததும்கூட. அதுவும் வடகிழக்கிப் பருவமழை முடியும் தருவாயில் இத்தகைய பெருமழையை யாரும் எதிர்பார்த்திருக்க இயலாது. 100 வருடங்களில் இப்படி நிகழ்ந்ததில்லை” என்றார்.
தனியார் வானிலை ஆர்வலர் கருத்து: ஒரே நாளில் 95 செமீ மழை பெய்து அதிர்ச்சியளித்துள்ள நிலையில் இது குறித்து தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறுகையில், “ஞாயிறு தொடங்கிய மழை திங்கள்வரை கொட்டித் தீர்த்தது. தமிழகத்தின் சமவெளிப் பகுதியில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெய்த மழையென்றால் அது 1992ல் மாஞ்சோலையில் பதிவான 96.5 செமீ ஆகத் தான் இருந்தது. அப்போது புயலால் அந்த அளவு மழை பெய்தது. அதன்பின்னர் இப்போது பதிவானதுதான் அதிகபட்ச மழை. மலைப்பகுதிகளில் 60 முதல் 90 செமீ மழைப் பொழிவுக்கு சாத்தியமுள்ளது என்றாலும் சமவெளியில் இந்த அளவு மழை மிகமிக அரிது. இருப்பினும் ஒரே ஒரு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு காலநிலை மாற்றத்துடன் தொடர்புபடுத்த இயலாது. குமரிக்கடல் பகுதியில் காற்று சுழற்சி ஒரே இடத்தில் மிகவும் மெதுவாக நகர்ந்ததால் மழைப்பொழிவு அதிகமானது. மிச்சாங் புயலால் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகனமழை பெய்ததற்கும் இதேபோல் காற்று சுழற்சி ஒரே இடத்தில் அதிக நேரம் இருந்ததே காரணம்” என்றார்.
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை தள்ளிவைக்க இயலாது: இந்நிலையில் க்ளைமேட் ட்ரெண்ட்ஸ் ( Climate Trends ) என்ற சூழலியல், காலநிலை ஆராய்ச்சி தொடர்பாக இயங்கும் தன்னார்வ அமைப்பின் கார்த்திகி ‘இந்து தமிழ்’ இணையதளத்தில் கூறுகையில், “இது எல் நினோ ஆண்டு. எல் நினோ ஆண்டில் இதுபோன்ற பாதிப்புகள் நடைபெறுகின்றன. 2015 சென்னை பெருவெள்ளம் ஏற்பட்டபோதும் எல் நினோ காலநிலை நிலவியது. இப்போது எல் நினோ தாக்கம் தீவிரமாக உள்ளது. புவி வெப்பமயமாதலே இதற்குக் காரணம்.
புவி வெப்பமயமாதலின் விளைவாக 93 சதவீத வெப்பத்தை கடல்கள் உள்வாங்கிக் கொள்கின்றன. இதனால் கடலின் மேல்பரப்பு சூடாகி புயல் உருவாக ஏதுவான சூழலை ஏற்படுத்துகிறது. அதேவேளையில் புயல் உருவாவதை முழுக்க முழுக்க கடல் நீரின் வெப்பம் மட்டுமே ஊக்குவிப்பதில்லை. கூடவே கடல் நீரின் அளவும் ஊக்குவிக்கிறது. புவி வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் கடல் மட்டத்தை உயர்த்திக் கொண்டே இருக்கின்றன. புவி வெப்பமயமாதலால் கடல் மேல்பரப்பின் வெப்பம் உயர்வதால் புயலின் உட்கரு பகுதிக்கு நெருக்கமாக இருக்கும் பகுதிகளில் ஒரு நாள் சராசரி மழையளவு 6.5 செ.மீ என்ற அளவைக் காட்டிலும் பல மடங்கு அதிகரிக்து உச்சபட்ச அளவை எட்டக்கூடும். புயலின் மையப் புள்ளியில் இருந்து 300 கிமீ தொலைவு வரை இருக்கும் பகுதிகளில் கனமழை பெய்கிறது. மிக்ஜாம் புயல் தாக்கம் இப்படித்தான் பரலாக பாதிப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இப்போது குமரிக் கடல் பகுதியில் நிலவிய உயர்மட்ட இடஞ்சுழி காற்று அதிக ஈரப்பற்றை உள்வாங்கி வலுப்பெற்று ஒரே இடத்தில் நீண்ட நேரம் வறண்ட காலநிலை கொண்ட நின்று உள் மாவட்டங்களைப் புரட்டிப் போட்டுள்ளது. இத்தகைய மழைக்குப் பின்னணியில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் இருப்பதை புறந்தள்ளிவிட முடியாது” என்றார்.