

கோவை: எரி சக்தி சேமிப்பை வலியுறுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் தேசிய மின் சக்தி சிக்கன வாரம் டிசம்பர் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.
இதையடுத்து, மின்வாரியம் சார்பில் மின் சிக்கனம், மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் அடங்கிய வாகன பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மின்சார வாகன பயன்பாட்டை பிரபலப்படுத்தும் வகையில் சாலை நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டுள்ளன.
இந்நிலையில், மின்சார சேமிப்பு குறித்து கோவை மாநகர் மின்பகிர்மான வட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சுவர்களுக்கு இளநிற வண்ணங்கள் பூசுவதால் ஒளி பிரதிபலிக்கப்பட்டு அறை வெளிச்சம் கூடும். மின் விளக்கின் முழு ஒளியையும் பெற, விளக்குகளை தூசி படியாமல் துடைத்து வைக்க வேண்டும். பகலில் இயற்கை காற்றையும், சூரிய ஒளியையும் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்.
குளிர் பதன பெட்டியை ( ரெஃப்ரிஜிரேட்டர் ) சுவரில் இருந்து ஒரு அடி தள்ளியும், வெப்பத்தை வெளியிடும் கருவிகளுக்கு அருகில் இல்லாதவாறும் வைக்க வேண்டும். குளிர்பதன பெட்டியின் ரப்பர் கேஸ்கட், தூய்மையாகவும், இறுக்கமாகவும் இருக்க வேண்டும். பெட்டியின் உள்ளே படியும் உறைபனியை அவ்வப்போது நீக்க வேண்டும்.
ஏசி பயன்படுத்தும் அறையின் கதவுகள், ஜன்னல்கள் நன்கு மூடப்பட்டிருக்க வேண்டும். மின்சார செலவை குறைக்க, ஏசியை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இயங்கும்படி வைக்க வேண்டும். ஏசியின் ஃபில்டரை மாதந்தோறும் சுத்தம் செய்வதால் மின்சாரத்தை சேமிக்கலாம். ரிமோட் மூலம் ஏசியை ஆஃப் செய்தால், ஸ்டெபிலைசர் மூலம் மின்சாரம் வீணாகும். எனவே, சுவிட்ச் மூலம் ஆஃப் செய்யவும்.
மின்சார வாட்டர் ஹீட்டருக்கு பதிலான சோலார் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தலாம். கணினி, தொலைக்காட்சி பெட்டி, செல்போன் சார்ஜர், இஸ்திரி பெட்டி போன்றவற்றை பயன்படுத்தாதபோது அவற்றின் மின்சார பிளக்குகளை கழற்றி வைப்பதன் மூலம் மின்சாரத்தை சேமிக்கலாம். மின்சாதனங்களும் பாதுகாப்பாக இருக்கும். வாஷிங் மெஷினில் அதிக பளு ஏற்றாமல், அதன் முழு கொள்ளளவுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.