தேமுதிக புதிய பொதுச் செயலர் பிரேமலதா முதல் எம்.பி.க்கள் இடைநீக்க சலசலப்பு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ டிச.14, 2023

தேமுதிக புதிய பொதுச் செயலர் பிரேமலதா முதல் எம்.பி.க்கள் இடைநீக்க சலசலப்பு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ டிச.14, 2023
Updated on
2 min read

‘தற்காலிக நிவாரணமாக ரூ.7,033 கோடி வழங்குக’: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். புயல் - மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்திட தற்காலிக நிவாரணத் தொகையாக 7,033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் வழங்கிட முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவா விமான நிலைய சம்பவத்துக்கு கண்டனம்: “பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது?” என்று கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவருக்கு ஏற்பட்ட நிகழ்வுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இந்தி தேசிய மொழி, கண்டிப்பாக அதை கற்க வேண்டும் என விமான பயணிகளை கட்டாயப்படுத்துவதா? என்றும், அத்துமீறும் படையினர் மீது நடவடிக்கை வேண்டும் என பாகம நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தேமுதிக பொதுச் செயலாளர் ஆனார் பிரேமலதா விஜயகாந்த்!: தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பு வியாழக்கிழமை சென்னை - திருவேற்காட்டில் நடந்த தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் வெளியிடப்பட்டது. தேமுதிக பொதுக்குழுவில் மொத்தம் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தேமுதிக நிறுவனத் தலைவர் - பொதுச் செயலாளர் விஜயகாந்த் கலந்துகொண்டார். அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

“எனக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அது ஒன்று மேடையில் வைக்கப்பட்டுள்ளது போன்ற மலர் கிரீடம் கிடையாது. அதுவொரு முள் கிரீடம். உண்மையாகவே நான் பதற்றமாகவும், மன அழுத்தத்துடன் இருக்கிறேன். மிகப் பெரிய பொறுப்பை அனைவரும் சேர்ந்து எனக்கு வழங்கி இருக்கிறீர்கள்” என்று தேமுதிக பொதுக்குழுக் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் உருக்கமாக பேசினார்.

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 உயர்வு: சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த தங்கத்தின் விலை சென்னையில் வியாழக்கிழமை சவரனுக்கு ரூபாய் 960 அதிகரித்து 46,560 ரூபாய் என விற்பனையானது.

கனிமொழி, ஜோதிமணி உள்ளிட்ட எம்.பி.க்கள் இடைநீக்கம்: மக்களவை அத்துமீறல் விவகாரத்தில் பிரதமர் மோடியோ அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்ட நிலையில், கனிமொழி, ஜோதிமணி உள்பட 14 எம்.பி.க்கள் மீது எஞ்சிய குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்க முடியாத வகையில், சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

‘மக்களவையில் இன்று இல்லாத திமுக எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபனும் இடைநீக்கம் செய்யப்பட்டது நகைப்புக்குரியது’ என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மக்களவையில் புதன்கிழமை நடந்த அத்துமீறல் தொடர்பாக உள்துறை அமைச்சர் அவையில் விளக்கமளிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் முழக்கமிட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் தவறான நடத்தை மற்றும் அவைத் தலைவரின் உத்தரவுகளை மீறிய காரணத்துக்காக மாநிலங்களையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், மக்களவையில் இல்லாத திமுக எம்.பி எஸ்.ஆர். பார்த்திபன் இடைநீக்கம் செய்யப்பட்டது தவறுதலாக நிகழ்ந்துவிட்டது. இது குறித்து சபாநாயகருக்கு தெரிவித்து அவரது பெயரை நீக்குமாறு கோரிக்கை விடுத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று அவரின் பெயரை சபாநாயகர் நீக்கிவிட்டார் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி விளக்கம் அளித்துள்ளார்.

“பாஜக அரசின் ‘தோல்வி’யை மறைக்க முயற்சி”: “எதிர்க்கட்சிகளை இந்த அரசு பயமுறுத்த நினைக்கிறது. தனது தோல்வியை மறைக்கவே கேள்வி கேட்ட எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்” என்று மக்களவை அத்துமீறல் விவகாரத்தில் பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளன.

பாதுகாப்பு அத்துமீறல் - ‘உபா’ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு: நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்கள் மீது யூஏபிஏ (UAPA) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிநபர் அல்லது அமைப்புகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த யுஏபிஏ சட்டம் கடந்த 1967-ல் கொண்டுவரப்பட்டது. நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் எதிராக நடைபெறும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தை இந்தச் சட்டம் வழங்குகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் கைதான 6 பேர் மீதும் டெல்லி போலீஸார் இந்தக் கடுமையான சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் தொடர்பாக மக்களவைப் பணியாளர்கள் 8 பேரை சஸ்பெண்ட் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட எஸ்பியாக ஐபிஎஸ் அதிகாரி பிரதீப்பும், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பியாக ஐபிஎஸ் அதிகாரி சமய் சிங் மீனாவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் 10 மாதங்களில் 2,366 விவசாயிகள் தற்கொலை: மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து அக்டோபர் வரையிலான பத்து மாதங்களில் 2,366 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக அம்மாநிலத்தின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் துறை அமைச்சர் அனில் பைதாஸ் பாட்டீல் சட்டப்பேரவையில் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

‘சர்வதேச அழுத்தம் அதிகரித்தாலும் போர் தொடரும்’: சர்வதேச அளவில் இருந்து போர் நிறுத்தத்துக்கான அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து சண்டையிடும் என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in